2010-08-19 15:01:12

மியான்மாரில் இராணுவ அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.அவை விசாரணை நடத்த வேண்டும் என்ற பரிந்துரைக்கு வரவேற்பு


ஆகஸ்ட் 19, 2010. மியான்மாரில் நடைபெறும் இராணுவ அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.அவையின் குழு ஒன்று விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் பரிந்துரையை அனைத்துலக கிறிஸ்தவ ஒன்றிப்பு (Christian Solidarity Worldwide) என்ற அமைப்பு ஆர்வமாய் வரவேற்றுள்ளது.
மியான்மார் அரசு மனித உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஐ.நா.அவையின் குழு தீர ஆராய்ந்து, அந்நாட்டில் மனித உரிமைகளை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இப்புதனன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் பிரித்தானிய அரசு, ஆஸ்திரேலியா உட்பட நான்கு நாடுகளைத் தொடர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாடும் ஜந்தாவது நாடாக இந்தப் பரிந்துரையைக் கூறியிருப்பது போற்றுதற்குரியது என்று இந்த கிறிஸ்தவ அமைப்பின் ஆசியத் தலைவர் பெனடிக்ட் ரோஜெர்ஸ் கூறினார்.அமெரிக்காவின் இந்த அறிக்கையை, பிற ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும் அனுப்பி, அவர்களது ஆதரவையும் தேடி வருவதாக ரோஜெர்ஸ் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.