2010-08-19 15:00:12

மத்திய பிரதேசத்தில், ஒரு கத்தோலிக்கப் பள்ளி தாக்கப்பட்டுள்ளது


ஆகஸ்ட் 19, 2010. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில், ஒரு கத்தோலிக்கப் பள்ளி இப்புதனன்று தாக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் Khandwa பகுதியில் உள்ள புனித பத்திநாதர் மேல்நிலைப் பள்ளியில் இப்புதன் காலை 60 பேர் கொண்ட இளையோர் குழு அத்து மீறி நுழைந்து, அங்குள்ள கதவு, சன்னல், கணனிகள் உட்பட பல பொருட்களையும் உடைத்தனர்.
பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சார்ந்ததாக நம்பப்படும் இந்த வன்முறை கும்பல், இப்புதன் காலை பள்ளி ஆரம்பமாவதற்கு முன்னரே அங்கு நுழைந்து, பள்ளியின் கதவுகளை மூடிவிட்டு, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைக்க ஆரம்பித்தனர் என்று பள்ளியில் பணி புரியும் அருள்தந்தை பிஜு திருத்தனத்தில் கூறினார்.
ஊதிய உயர்வு கேட்டு கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள ஒரு சில ஆசிரியர்களின் தூண்டுதலால், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தாக்குதல் ஆரம்பித்த சிறிது நேரத்தில் காவல் துறை வந்ததால், வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கலைந்து சென்றதாகவும், இந்த வன்முறையில் ஈடுபட்ட யாரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.மத்திய பிரதேசத்தில் 2003ம் ஆண்டிலிருந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளதென்பதும், அந்த ஆண்டு முதல் இதுவரை அந்த மாநிலத்தில் 184 முறை கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.