2010-08-19 15:01:36

ஆகஸ்ட் 19 - உலக மனிதநேய நாள்


ஆகஸ்ட் 19, 2010. கடந்த இரு ஆண்டுகளாக ஐ.நா. அவை ஆகஸ்ட் 19ம் தேதியை உலக மனிதநேய நாளாகக் கொண்டாடி வருகிறது.
2003ம் ஆண்டு பாக்தாத் நகரில் இருந்த Canal Hotel என்ற உணவு விடுதி, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான போது, அங்கு தங்கியிருந்த ஐ.நா. அமைப்பின் 22 பணியாளர்கள் கொல்லப்பட்டனர்; மேலும் 150 பேர் காயமடைந்தனர். அந்த நினைவைச் சிறப்பிக்கும் வகையில் இரு ஆண்டுகளுக்கு முன், ஐ.நா.வின் பொது அவை ஆகஸ்ட் 19ஐ உலக மனிதநேய நாளாக அறிவித்தது.
இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் இந்த நாளையொட்டி, ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன், நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஐ.நா.வின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பல நாடுகளிலும், இந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பொதுவாக, எந்த ஒரு நாடும் மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி வந்துள்ளது எனினும், கடந்த சில ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டிருந்த பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும், 2009ம் ஆண்டில் மட்டும் இவ்வகைப் பணியில் ஈடுபட்டிருந்த 102 பேர் பல தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.