2010-08-16 15:40:10

இந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை எதிர்த்து, கண்டனக் கூட்டம்


ஆகஸ்ட் 16, 2010 இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் உள்ள தேசியப் பூங்காவில் கத்தோலிக்கர்கள், புத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என ஆயிரம் பேருக்கு மேலானோர் இஞ்ஞாயிறன்று கூடி, கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை எதிர்த்து, கண்டனம் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 8 அன்று மேற்கு ஜாவாவில் உள்ள ஒரு கோவில் தாக்கப்பட்டது உட்பட அண்மைக் காலத்தில் பல கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அண்மையில் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தாக்குதல்களுக்கு இந்தோனேசிய அரசு பொறுப்பேற்று, இது போன்று வருங்காலத்தில் நடைபெறாவண்ணம் நாட்டின் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசிய கத்தோலிக்க பல்கலைக் கழக மாணவர்களின் தலைவர் Stefanus Gusman கூறினார்.

இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த போதகர் Erwin Marbun பேசுகையில், அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றும், அடிப்படை வாதம் நாட்டில் பரவாமல் தடுப்பது, நாட்டு மக்கள் ஒவ்வொருவரது கடமை என்று கூறினார்.

செபத்துடன் கூடிய இந்த ஞாயிறு போராட்டத்தில், மாணவர் குழுக்களும், நாட்டின் அமைதி, மக்கள் ஆட்சி இவற்றை போற்றும் குழுக்களும், அமைதிக்காக உழைக்கும் இஸ்லாமியக் குழுக்களும் பங்கேற்றன.








All the contents on this site are copyrighted ©.