2010-08-16 15:33:48

அன்னை மரியின் விண்ணேற்புத் திருவிழாவையொட்டி திருத்தந்தையின் மறையுரையும் மூவேளை ஜெப உரையும்.


ஆகஸ்ட் 16, 2010 அன்னை மரியின் விண்ணேற்புத் திருவிழாவையொட்டி இஞ்ஞாயிறன்று திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோவின் பங்குதளத்தில் நிறைவேற்றியத் திருப்பலியிலும் கோடைவிடுமுறை இல்லத்திலிருந்து வழங்கிய மூவேளை ஜெப உரையிலும், திருச்சபையில் துவக்க காலத்திலிருந்து இன்று வரை அன்னை மரியின் பங்கு குறித்து எடுத்துரைத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

அப்போஸ்தலர்களின் வழிகாட்டியும், மறைசாட்சிகளின் ஆதரவும், புனிதர்களின் ஒளியுமான அன்னை மரியை நோக்கி ஜெபிப்போம் என்ற திருத்தந்தை, அனைத்து காலங்களின் கலைஞர்கள் அன்னை மரியின் புனிதத்தைப் பல்வேறு கோவில்களில் ஓவியமாகவும் சிற்பமாகவும் வடித்துள்ளதையும் நினைவு கூர்ந்தார். கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் தங்கள் படைப்புகள் மூலம் அன்னை மரியை கௌரவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை. 4ம் நூற்றாண்டிலிருந்து திருச்சபையில் சிறப்பிக்கப்படும் அன்னை மரி விழாக்களுள் சில, மீட்பு வரலாற்றில் அன்னையின் இடத்தையும், ஏனையவை அன்னையின் இவ்வுலக வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் நினைவுறுத்தி கொண்டாடுபவைகளாக உள்ளன என்றார் அவர்.

அன்னை மரி உடலோடும் ஆன்மாவோடும் விண்ணுலக மகிமைக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறித்த இறையியல் கோட்பாடு திருத்தந்தை 12ம் பத்திநாதரால் வெளியிடப்பட்டதன் 60ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் தற்போது இடம்பெற்று வருவதையும் எடுத்தியம்பினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.