2010-08-14 16:11:26

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில், அல்லது ஆகஸ்ட் 15 விடிந்த அந்த முதல் மணித்துளிகளில் இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது. 1950 சனவரி 26 நம் நாட்டில் இனி நடக்க இருப்பது மக்களாட்சி என்று உலகறியச் சொன்னோம். நாம் மக்களாட்சியை உலகறியச் செய்த அதே 1950ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் இறை அன்னை மரியா உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துச் செல்லப்பட்டார் என்ற உண்மையை உலகறியச் செய்தார். இந்திய மக்களாட்சி அறிக்கையும், அன்னை மரியா விண்ணேற்பு அறிக்கையும் இவ்வாண்டு தங்கள் வைர விழாவைக் கொண்டாடுகின்றன.
விண்ணேற்பு அறிக்கை வந்து 60 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், மரியாவின் விண்ணேற்புத் திருவிழாவைக் கிறிஸ்தவ உலகம் 8 அல்லது 9ம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடி வருகின்றது. மரியன்னையை மையமாகக் கொண்டு பல விழாக்கள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன. அவற்றில், 19 திருவிழாக்கள் கத்தோலிக்க உலகம் அனைத்திற்கும் பொதுவான திருவிழாக்கள். இவையன்றி, மே மாதம் அன்னை மரியாவின் மாதம் என்றும், அக்டோபர் அன்னையின் புகழை ஒலிக்கும் செபமாலை மாதம் என்றும் கொண்டாடுகிறோம். இவைகளன்றி, வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்னையின் நினைவு அனுசரிக்கப்படுகிறது.
தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற வேளை நகர் அன்னையின் பக்தி இன்று பல நாடுகளில் பரவியுள்ளது. வேளை நகர், பாத்திமா நகர், லூர்து நகர் என்று உலகில் அன்னையின் பலத் திருத்தலங்களில் வருடம் முழுவதும் அன்னையின் பக்திக்குச் சான்று பகரும் பல நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
இவை அனைத்தையும் ஒன்று திரட்டிப் பார்க்கும் போது, கத்தோலிக்கத் திருச்சபையிலும், இன்னும் அன்னையின் திருத்தலங்களைத் தேடி வரும் பல கோடி மக்களின் வாழ்விலும் அன்னை மரியா மிக, மிக உயர்ந்த ஓரிடத்தைப் பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம்.

ஒவ்வொரு முறையும் மரியன்னையின் திருவிழாவைக் கொண்டாடும்போது, என் மனதுக்குள் சில கேள்விகள் எழும். இன்றும் எழுகின்றன.
இந்த உலகம் இன்று காட்டும் இந்த அளவு மரியாதை, புகழ், வணக்கம் இவைகளெல்லாம் மரியா வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைத்தனவா? மரியா வாழ்ந்த காலத்தில் அவர் அனுபவித்த கொடுமைகள், அடி, மிதி இவைகளை மறந்து விட்டு, அல்லது மறைத்து விட்டு, மரியன்னையை இப்படி புகழின் உச்சியில் மட்டும் பார்க்க விழையும் நம் பக்தியை அவர் விரும்புவாரா? அல்லது, இந்த அளவு அவர் உயர்ந்ததற்குக் காரணமாய் இருந்த அவர் வாழ்வுப் பாடங்களை நாம் மீண்டும் கற்றுக் கொள்வது அவருக்கு அதிகம் பிடிக்குமா? இவை என் மனதில் எழும் நெருடலான கேள்விகள்.
அன்னை மரியாவின் ஒவ்வொரு விழாவின் போதும், அவரது வாழ்வைக் கொஞ்சமாகிலும் புரட்டிப் பார்க்க, அவரது வாழ்வு சொல்லித் தரும் பாடங்களைச் சிறிதாகிலும் பின்பற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. வரலாற்றில் வாழ்ந்த அந்த மரியாவைச் சந்திப்போமா?

அன்னை மரியாவைச் சந்திக்க அவர் வாழ்ந்த அந்த முதல் நூற்றாண்டுக்குச் செல்வோம்... இல்லை, இந்த அன்னையைச் சந்திக்க கி.மு.வின் இறுதி சில ஆண்டுகளுக்குச் செல்ல வேண்டும்.
கி.மு. 5 அல்லது, 6ம் ஆண்டைக் கற்பனை செய்து கொள்வோம். கலிலேயா பகுதியில், ஒரு சின்னக் கிராமம் நாசரேத். அந்தக் கிராமத்தில் வாழ்ந்த இளம் பெண் மரியா. இந்தப் படிப்பறிவில்லாத, கிராமத்துப் பெண் இன்று உலகில் இவ்வளவு தூரம் பேரும் புகழும் அடைவார் என்று அவர் சிறிதும் கற்பனை செய்திருக்க மாட்டார். கனவு கண்டிருக்க மாட்டார்.
மரியா என்ற அந்த கிராமத்துப் பெண் கண்டு வந்த கனவெல்லாம் ஒன்றுதான். தினம் தினம் செத்துப் பிழைக்கும் தானும், தன் மக்களும் உரோமையக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் கனவாக இருந்திருக்க வேண்டும்.
மரியாவையும், அவரது யூத சமுதாயத்தையும் இரவும் பகலும் தாக்கி வந்த உரோமையக் கொடுமைகளை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க முடியும். ஆங்கிலேய ஆதிக்கத்தில் நம் நாடு இருந்த வேளையில் நமக்கு முந்தியத் தலைமுறையினர் இது போன்ற கொடுமைகளைச் சந்தித்திருப்பார்கள்.
ஒரு நாட்டை வேற்று நாட்டவர் அடிமைப் படுத்தியிருக்கும் போது, அங்கு கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள், அவலங்கள் ஏராளம். அரசியல், பொருளாதாரம், சமயச் சுதந்திரம் என்று மக்களின் பொதுவான சுதந்திரங்கள் பறி போவதைப் பற்றி அந்த நாட்டு வரலாறு பேசும். ஆனால், அன்னியப் படை வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் சாதாரண மக்கள் ஒவ்வொரு நாளும் படும் சித்ரவதைகள் வரலாற்றில் எழுதப்படுவதில்லை. அவைகளைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதுமில்லை.
ஒரு நாட்டை ஆக்ரமிக்கும் அன்னியப் படை வீரர்களின் பொழுது போக்காக, விளையாட்டுப் பொருள்களாக அந்த நாட்டுப் பெண்கள், முக்கியமாக இளம் பெண்கள் மாறுவது எல்லா நாடுகளிலும் இன்றும் நடைபெறும் அக்கிரமம்தான்.
ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் நடத்திய விபரீத விளையாட்டுக்களை சில ஆண்டுகளுக்கு முன் நாம் கேட்டோம். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவ வீரர்களின் அத்துமீறியச் செயல்பாடுகளை அடிக்கடி கேட்டு வருகிறோம். நம் நாட்டிலும், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மக்கள், முக்கியமாக, இளம் பெண்கள் இரவும், பகலும் படும் துன்பங்கள் எண்ணிலடங்காமல் பெருகிக் கொண்டே இருக்கின்றன. தினமும் நடந்து வரும் இந்த அவலங்கள் அவ்வப்போது அத்து மீறிப் போகும் போது மட்டுமே செய்தித்தாள்களில் இடம் பெறுகின்றன.
இராணுவம் மக்களைக் காக்கும் ஒர் அமைப்பு என்பது ஏட்டளவில் வகுக்கப்பட்டுள்ள ஒர் இலக்கணம். ஆனால், நடைமுறையில், பல இராணுவ வீரர்கள் நடந்து கொள்ளும் முறை அந்த இலக்கணத்தையே தலை கீழாகப் புரட்டிப் போடுகின்றது. எங்கெங்கு இராணுவ வீரர் முகாம்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் பெண்கள் பகலில் தங்கள் பாதுகாப்பை இழந்து, இரவிலும் தூக்கத்தை இழந்து வாழ்வது இன்றையக் கொடுமை. தங்கள் நாட்டு வீரகளிடமே பெண்கள் பயந்து வாழவேண்டிய நிலை இருக்கும் போது, அந்நிய நாட்டு வீரர்களால் ஒரு நாடு ஆக்ரமிக்கப்படும் போது, அந்தப் பெண்களின் நிலை பற்றி சொல்லவும் வேண்டுமா?
இந்த நிலையில் வாழ்ந்தவர்தான் மரியா. உரோமைய வீரர்களின் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்ட அந்த இளம் பெண், தனக்கும், தன் மக்களுக்கும் என்று விடுதலை கிடைக்கும் என்று ஏங்கி வந்தார். அந்த விடுதலைக்காக இறைவனை அவர் வேண்டாத நாளே இல்லை. அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. அவர் ஏங்கிய விடுதலை வந்தது. ஆனால், எப்படி வந்தது? ஒரு பெரும் இடியென வந்து இறங்கியது அந்த விடுதலை.

மரியாவின் ஏக்கங்களுக்கு, அவர் தினமும் எழுப்பி வந்த செபங்களுக்கு இறைவன் பதில் தந்தார். "உனக்கும், உன் மக்களுக்கும் விடுதலை வழங்க என் மகனை அனுப்புகிறேன். ஆனால், என் மகனுக்கு நீ தாயாக வேண்டும்." என்று இறைவன் அனுப்பிய செய்தியைக் கேட்டு மரியா ஆடிப்பாடியிருக்க மாட்டார். ஆடிப் போயிருப்பார். நிலை குலைந்திருப்பார்.
திருமணம் ஆகாமல் தாயாகும் ஒரு பெண்ணுக்கு யூத சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதை மரியா நேரில் பார்த்தவர். ஊருக்கு நடுவே, அந்தப் பெண் கல்லால் எறியப்பட்டுக் கொல்லப்படுவார். அதுவும் தங்கள் ஊர் ரோமைய வீரகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பின், இந்தக் கல்லெறிக் கொலைகள் அடிக்கடி நடந்ததையும் பார்த்தவர் மரியா. அந்த வீரகளால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளான பெண்கள், மரியாவின் தோழிகள் இதுபோல் கொல்லப்பட்டிருக்கலாம். அதைக் கண்டு மரியா பல நாட்கள் உண்ண முடியாமல், உறங்க முடியாமல் துன்புற்றிருக்க வேண்டும்.

அண்மையில் மின்னஞ்சல்கள், இணையதளம் வழியே Sakineh Ashtiani என்ற 43 வயதான ஈரான் நாட்டு பெண்ணைப் பற்றி செய்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட இந்தப் பெண், கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டுமென்று ஈரானில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உலக அளவில் பல நாடுகளில் இருந்து எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட வேண்டுமென்று மின்னஞ்சல்கள் வலம் வந்தன.
அந்த மின்னஞ்சல்கள் வழியாக, கல்லால் எறிந்து கொல்லப்படும் இந்த தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்படும் என்று புகைப்படங்களுடன் விளக்கமும் வந்திருந்தன. இவைகளைக் கண்ட நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தண்டனை பெற்ற அந்தப் பெண்கள் கழுத்து வரை புதைக்கப்படுவார்கள். தலை மட்டும் வெளியே தெரியும். பின்னர், மக்கள் புதைக்கப்பட்ட அந்தப் பெண்ணைச் சுற்றி நின்று அந்தப் பெண்ணின் தலையைக் கல்லால் எறிந்து கொல்வார்கள். மிகவும் அதிர்ச்சி தரும் செய்திதான். இருபதாம் நூற்றாண்டில் இப்படியொரு மிருகத் தனமான தண்டனையா? முன்பு உரோமையர்கள் நாகரீகத்தின் உச்சியில் தாங்கள் இருந்ததாக சொல்லிக் கொண்டிருந்த போது, இப்படி மனிதர்களை மிருங்கங்களுக்கு இரையாக்கி, சுற்றி நின்று இரசித்த அந்தக் காலத்திற்கு ஈரான் மீண்டும் நம்மை அழைத்துச் சென்றுள்ளது.

அந்த உரோமையக் கொடுமைகளிலிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்ட இளம் பெண் மரியாவுக்கு வந்த விடுதலைச் செய்தி மரண தண்டனைக்கு இணையான ஓர் அழைப்பாக இருந்தது. அந்த அழைப்பு இறைவனிடம் இருந்து வந்ததால், மரியா ஆம் என்று சம்மதம் சொன்னார்.
இளம் பெண் மரியாவின் உறுதி, இறைவன் மீது அவர் கொண்டிருந்த ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை, அவர் தந்த அந்த சம்மதத்தில் மட்டும் வெளிப்படவில்லை. அதைத் தொடர்ந்து, அன்னை மரியா சந்தித்த ஒவ்வொரு நிகழ்விலும் அந்த உறுதி, அந்த நம்பிக்கை வெளிப்பட்டது.
குழந்தைப் பேறு நெருங்கி வரும் நேரத்தில், தன் சொந்த ஊரை விட்டு அவர் கிளம்ப வேண்டியிருந்தது.
குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில், தன் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், வேறொரு நாட்டுக்கு அகதியாக ஓட வேண்டியிருந்தது.
எருசலேம் திருவிழாவில், தன் 12 வயது மகனை இழந்து விட்டு, மூன்று நாட்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது.
தன் வாழ்க்கைத் துணையான யோசேப்பை இழந்த பின், மகன் தன்னுடன் வாழ்வான் என்று கனவு கண்டிருந்த வேளையில், அந்த மகன் ஊருக்கு உழைக்கக் கிளம்பியதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
தன் மகனின் பணிகளைப் பிடிக்காதவர்கள் தன் காது படவே அவரை மதி இழந்தவன் என்று கூறுவதைக் கேட்க வேண்டியிருந்தது.
இறுதியில் தன் மகனை அநியாயமாக சிலுவை மரணத்திற்குத் தீர்ப்பிட்ட மதத் தலைவர்களோடு அந்தச் சிலுவைக்கடியில் தன் மகனின் கொடிய வேதனைகளைப் பார்த்தும் ஒன்றும் செய்யமுடியாமல் நிற்க வேண்டியிருந்தது.

தவிர்க்க முடியாததாய்த் தெரிந்த இந்தச் சூழ்நிலைகளிலெல்லாம் மனதுக்குள் அந்த அன்னையின் நம்பிக்கை குறையவில்லை. இந்த நம்பிக்கை, இந்த வீரம் அந்த அன்னையின் உடலோடு இந்த பூமிக்குள் புதைந்து விடக் கூடாதென்றுதான், அந்த அன்னை, சாவைச் சந்திக்காமல், விண்ணகம் அடைய இறைவன் வழி வகுத்தார். அந்த அற்புதத்தைத் தான் இன்று அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
அன்னை மரியாவின் நம்பிக்கையை, வீரத்தை இறைவன் இப்படிச் சாவின்றி வாழ வைத்ததனால், இந்த அன்னையைப் போல் இன்றும் உலகில் எத்தனையோ அன்னையர், அதுவும், சமுதாய விளிம்புகளில், வறுமையின் கோரப்பிடியில் தினமும் போராடும் அன்னையர் தங்களைச் சுற்றி நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் உருவாகும் எத்தனையோ சூழல்களில் தங்கள் வீரத்தை, நம்பிக்கையைக் கைவிடாமல் வாழ்ந்து வருகின்றனர். நம்பிக்கையை இழக்காமல் அவர்கள் வாழும் இந்த வீர வாழ்க்கைதான் இந்த விழாவை நாம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுகிறோம் என்பதற்கு மிகப் பெரிய சான்று.
 பீடங்களில் ஏற்றி, புகழ் மாலை பாடி, திருநாட்கள் கொண்டாடி அன்னை மரியாவைப் பெருமைப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், அவரைப் போல் பல வழிகளிலும் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சந்தித்து வரும் கோடான கோடி தாய்களுக்கு இன்றும் ஒரு பாடமாக, அவர்களை ஊக்குவிக்கும் ஒரு உந்து சக்தியாக தான் இருக்கிறோம் என்ற எண்ணமே, அந்த விண்ணகத் தாய்க்கு இன்னும் அதிக மகிழ்ச்சியூட்டும். அன்னை மரியாவோடு நாமும் சேர்ந்து அந்த மகிழ்வை, அந்த நம்பிக்கையைக் கொண்டாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.