2010-08-13 16:01:19

நோன்பு இருக்கும் முஸ்லீம்களுக்கு மரியாதை காட்டுமாறு ஈராக் பேராயர் அழைப்பு


ஆக.13,2010: ஈராக் கிறிஸ்தவர்கள் பொது இடங்களில் சாப்பிடாமல் இருப்பதன் மூலம் ரம்ஜான் நோன்பு மாதத்தைத் தொடங்கியிருக்கும் முஸ்லீம்கள் மீதான தங்களது நன்மதிப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுள்ளார் ஈராக் பேராயர் லூயிஸ் சாக்கோ.

முஸ்லீம்கள் தொடங்கியுள்ள ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள ஈராக்கின் கிர்குக் பேராயர் சாக்கோ, இந்த ரம்ஜான் மாதம், செபத்திற்கும் மனமாற்றத்திற்கும் புண்ணியத்தில் வளர்வதற்கும் ஏற்ற காலமாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த ரம்ஜான் மாதம் ஈராக்கியர்களுக்கு மன்னிப்பதற்கானத் தைரியத்தை அளித்து, ஒப்புரவு மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களின் காயங்களைக் குணப்படுத்தி, அமைதி, பாதுகாப்பு மற்றும் உறுதியானதன்மையை மீண்டும் அவர்கள் கண்டுணர உதவும் காலமாக இருக்கும் என்ற பேராயரின் நம்பிக்கையும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் பொது இடங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து ஒழுங்காக உடை உடுத்தி முஸ்லீம் சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட பேராயர், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முஸ்லீம்களின் செபங்களோடு கிறிஸ்தவர்களும் இணையுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரம்ஜானை முன்னிட்டு துபாயில் சாலைகளில் சாப்பிடுவது மற்றும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.