2010-08-13 16:08:02

ஐரோப்பாவில் பரவும் ஆபத்தான நோய்க்கிருமி: இந்தியாவைத் தொடர்புபடுத்துவதற்கு கண்டனம்


ஆக.13,2010: இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான நோய்க்கிருமி பரவி வருவதாகக் கூறப்படுவது தவறானப் பிரசாரம் என்று சொல்லி அதற்கு இந்திய அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலும் தங்களது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இலண்டனைச் சேர்ந்த 50 பேர் புதிய வகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. அந்த நோய்க்கிருமி இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு பரவி உள்ளதாகக் கூறும் ஐரோப்பிய விஞ்ஞானிகள், புதிய பாக்டீரியாவுக்கு "புதுதில்லி மெட்டல்லோ-பீட்டா-லேக்டோமோஸ்" என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த மருத்துவ ஆய்வு முடிவைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆராய்ச்சி பிரிவுத் தலைவர் வி.எம்.கடோச், இதற்கு அறிவியல்பூர்வமாக எவ்வித ஆதாரமும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாகக் கூறப்படும் இதே வகை பாக்டீரியா இஸ்ரேல், அமெரிக்கா, கிரீஸ், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்துதான் பாக்டீரியா கிருமி பரவியதாகக் கூறுவது முற்றிலும் தவறான கருத்து. இவ் வகை பாக்டீரியாக்கள் உலகில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் உருவாகலாம். இந்தியாவில்தான் உருவாகிறது என்று குறிப்பிட்டு கூறுவது உள்நோக்கம் கொண்டது.

மேற்கத்திய நாடுகளின் கண்களை உறுத்தும்வகையில் இந்திய மருத்துவ சுற்றுலா அண்மைக்காலமாக அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இப்போதைய நிலையில் மருத்துவ சுற்றுலா மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராகத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக மாநிலங்களவையில் இவ்வியாழக்கிழமை எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினர்.







All the contents on this site are copyrighted ©.