2010-08-12 16:23:11

இலங்கையில் வீரகேசரி பத்திரிக்கையின் பணியை கிறிஸ்தவர்கள் பாராட்டியுள்ளனர்


ஆகஸ்ட் 12, 2010 இலங்கையில் கடந்த 80 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் குரலோலியாகச் செய்திகளை வழங்கி வரும் ‘வீரகேசரி’ பத்திரிக்கையின் பணியை அங்குள்ள கிறிஸ்தவர்கள் பாராட்டியுள்ளனர்.
200 ஆண்டுகளுக்கு முன் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிய கொண்டுவரப்பட்ட இந்தியர்களிடையே இருந்த அறியாமையை விலக்கும் வண்ணம் உழைத்து வந்துள்ள பத்திரிகை இதுவென்று திரிகோணமலை-மட்டக்களப்பு காரித்தாஸ் அமைப்பின் தலைவர் அருள்தந்தை ஸ்ரீதரன் சில்வெஸ்டர் கூறினார்.
இலங்கையில் புத்த மதம் பெரும்பான்மையினரின் மதமாக இருந்தாலும், பிற மதங்களின் நிகழ்வுகளையும், கருத்துக்களையும் இந்தப் பத்திரிக்கை தாங்கி வருவதாலும், பெரும்பான்மை மக்கள் பங்கேற்கும் சமய விழாக்களின் போது இந்த நாளிதழ் சிறப்புப் பகுதிகளைப் பிரசுரிப்பது போன்ற நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளதாலும் இந்தப் பத்திரிகைக்குக் கிறிஸ்தவர்கள் ஆதரவு தருவது பொருத்தமே என்று அமைதி ஆர்வலர் ஜெரோம் பெர்னாண்டோ கூறினார்.
1930ம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகை, இப்போது 50 லட்சம் மக்களால் வாசிக்கப்படுகிறது. இந்தப் பத்திரிக்கையின் 80 ஆண்டு சேவையைப் பாராட்டி, அரசுத் தலைவர் ராஜபக்ச உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.மேலும், கொழும்பு உயர்மறை மாவட்டம் ஒரு கத்தோலிக்க மாத இதழை ஆரம்பிக்க உள்ளதென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.