2010-08-12 16:22:28

அன்னை தெரசாவின் நூறாவது பிறந்தநாளையொட்டி ஒரு திரைப்பட விழாவும், ஒரு கண்காட்சியும் கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ளன


ஆகஸ்ட் 12, 2010 இந்த ஆகஸ்ட் மாதம் நினைவுகூரப்படும் அன்னை தெரசாவின் நூறாவது பிறந்தநாளையொட்டி, உலகமெங்கும் மேற்கொள்ளப்படும் பல்வேறு செயல்பாடுகளின் மத்தியில், அவரது வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்களடங்கிய ஒரு திரைப்பட விழாவும், அன்னையின் ஓவியங்கள் அடங்கிய ஒரு கண்காட்சியும் கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ளன.
1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த அன்னை தெரசாவின் நூறாவது பிறந்தநாளன்று கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற நந்தன் கலை அரங்கத்தில் திரைப்பட விழா ஆரம்பமாகும்.
Ann Jeanette Petrie, Dominique Lapiere ஆகியோர் உருவாக்கிய திரைப்படங்களுடன், 'அழைத்தலுக்குள் ஓர் அழைப்பு' என்று பொருள் படும் ‘A Call Within A Call’ என்று பெயரிடப்பட்டு, இந்திய ஆயர் பேரவை தயாரித்த திரைப்படமும் காண்பிக்கப்படும்.
இவைகள் அல்லாமல், அன்னையைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கத் திரைப்படங்கள், நான்கு இந்தியத் திரைப்படங்கள், மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள திரைப்படங்கள் இந்தத் திரைப்பட விழாவில், திரையிடப்படும்.
மேலும், Ritu Singh, Nemai Sengupta, Sunita Kumar போன்ற கலைஞர்கள் தீட்டிய ஓவியங்களுடன், இன்னும் பலர் தீட்டிய ஓவியங்கள் அடங்கிய ஒரு கண்காட்சி கொல்கொத்தாவில் புனித சேவியர் கல்லூரி அரங்கத்தில் ஆகஸ்ட் 27 திறந்து வைக்கப்படும்.
Ann Jeanette Petrie உருவாக்கிய 'மதர் தெரசா' என்ற திரைப்படம் வத்திக்கான், புது டில்லியில் பாராளு மன்றம், அமெரிக்காவில் வெள்ளை மாளிகை என்று பல இடங்களிலும் ஏற்கனவே திரையிடப்பட்ட புகழ் மிக்கதொரு திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் Petrie திரைப்பட விழாவில் கலந்து கொள்வார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.குவஹாத்தி, நாக்பூர், பெங்களூரு போன்ற இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும், பங்களாதேஷ், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா என்று பிற நாடுகளிலும் இந்தத் திரைப்பட விழா நடத்தப்படும் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.