2010-08-11 15:46:34

திருப்பீடத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறபட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதொரு செய்தி - திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர்


ஆகஸ்ட் 11, 2010 அமெரிக்காவில் கென்டக்கி நகரில் திருப்பீடத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை அந்த வழக்கறிஞர் வாபஸ் பெற்றிருப்பது வரவேற்கப்பட வேண்டியதொரு செய்தி என்று திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் இயேசு சபை குரு லொம்பார்தி கூறினார்.

‘திருப்பீடத்திற்கு எதிராக O'Bryan’ என்று அழைக்கப்பட்ட ஒரு வழக்கில் குருக்கள் தங்களைப் பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை திருப்பீடம் பல ஆண்டுகளாக மறைத்து வந்ததாகவும் மூவர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கை William McMurry என்ற வழக்கறிஞர் முன்னின்று நடத்தி வந்தார். இச்செவ்வாயன்று, இந்த வழக்கறிஞர் திருப்பீடத்திற்கு எதிரான இந்த வழக்கைத் தான் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இந்தச் செய்தி வெளியானதும், நிருபர்களிடம் பேசிய திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி, இந்த செய்தி நல்லதொரு செய்தி, ஏனெனில், ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் திருப்பீடத்திற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது என்பது வெளியாகிறது என்றார்.

இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டிருப்பதால், திருப்பீடத்தைக் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள தவறான கருத்துக்களைத் திருத்துவதற்கு இது வழிவகுக்கும் என்று திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை லோம்பார்தி மேலும் கூறினார்.

ஆதாரங்கள் ஏதுமில்லாததால், கென்டக்கி வழக்கு வாபஸ் பெறப்பட்டிருப்பது, பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டக் குருக்களைக் காப்பது எந்தக் காலத்திலும் வத்திக்கானில் இருந்ததில்லை என்பதைத் தெளிவாக்குகிறது என்று திருப்பீடத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் Jeffrey Lena கூறினார்.

குருக்களின் தவறான நடத்தைகளால் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. எனினும், சிறார்களைப் பாதுக்காக்கும் முயற்சிகளில் அதிகம் கவனம் செலுத்தாமல், திருப்பீடத்தைக் குற்றம் சாட்டும் வழக்குகளில் அதிக கவனம் செலுத்தியது மக்களைத் திசை திருப்பும் ஒரு முயற்சியாகத் தனக்குத் தெரிகிறதென வழக்கறிஞர் Jeffrey Lena மேலும் கூறினார்







All the contents on this site are copyrighted ©.