2010-08-11 16:35:53

ஆகஸ்ட் 12 – நாளும் ஒரு நல்லெண்ணம்


காற்றுக்கு யார் போடுவது வேலி? தடை செய்பவனே மூச்சுத் திணறி மரணத்தைத் தழுவ வேண்டியிருக்கும். காற்றில்லா இடத்தில் புல் கூட முளைப்பதில்லை.

பூமித்தாயின் உயிர்மூச்சே காற்று. அம்மூச்சே மகரந்தத்தூளைச் சுமந்துச் சென்று புத்துயிருக்குப் புதுவாசல் திறக்கிறது.

புல்லாங்குழலுக்குள் இசையாய் மாறும் காற்றுதான் புயலாய் மாறி பூமியைக் குலைக்கிறது.

காற்றில்லா உலகில் காகம் பறக்க முடியுமா? மேகம் தான் கரு தாங்கி சிறகடிக்க முடியுமா?

காற்றின்றேல் மேகமில்லை. மேகமின்றேல் மழையில்லை.

காற்றின்றேல் நெருப்பில்லை. நெருப்பின்றேல் உலோகங்களுக்கு புது வடிவமில்லை.

அசைகின்ற இலையிலும் இரைகின்ற அலையிலும் காண இயலா சக்தியாய் இருப்பவளே காற்று.

நம் கைகால்களைக் காற்று அசைக்கவில்லை. ஆனால் காற்றின்றி கை கால்களை அசைக்க முடியுமா?

உலகின் எவ்வொரு சலனத்திற்கும் காற்றே காரணம். நிழலுக்கும் வியர்க்கும் கோடையில் காற்றுதானே கடவுள்.

குழந்தையின் காலடி ஓசையை, நிறைவேறா கனவின் பெருமூச்சை, ஏன், நம் வானொலிச் செய்தியைக்கூட சுமந்து வரும் அக்காற்றின் முக்கிய இடத்தை எவர் தான் மறுக்கமுடியும்?

வீமனும் அனுமனும் காற்றின் மக்கள் என்கிறது புராணம்.

உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்கிறது வேதம்.

காற்றே உயிராயும், உயிரே காற்றாயும் உள்ளது.

களிமண்ணால் ஆன உடம்புக்குள் உயிர்மூச்சு ஊதப்பட்டபின்னர் தானே உயிருள்ளவர் ஆனோம்?

கடவுளையும் காற்றையும் உற்றுப்பார்த்தேன்........

கண்ணுக்குப் புலப்படா சக்திகள்.








All the contents on this site are copyrighted ©.