2010-08-10 16:47:48

ஈராக்கின் மனிதாபிமான இடர்கள் களையப்படுவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் வேண்டுகோள்


ஆகஸ்ட்  10, 2010.      ஈராக்கில் இடம் பெற்ற ஏழு வருடச் சண்டையினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமானப் பேரிடர்களைக் களைவதற்கு உதவியாக அமெரிக்க ஐக்கிய நாடு போருக்குப் பின்னானத் திட்டங்களை ஊக்கவிக்க வேண்டுமென்று அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் தெயதோர் மெக்காரிக் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் வருகிற செப்டம்பர் ஒன்றாந்தேதிக்குள் ஈராக்கைவிட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுவது அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவப் பணியாளருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் நல்ல செய்தியாக இருக்கின்றது என்றுரைத்த கர்தினால் மெக்காரிக், இந்த வெளியேற்றமானது ஈராக் மக்களுக்கான, குறிப்பாக புலம் பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான ஈராக்கியர்களுக்கான அமெரிக்கர்களின் ஆதரவை  நீக்கிக் கொள்வதாக இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

செப்டம்பர் முதல் தேதிக்குப் பின்னரும் ஈராக்கில், படைவீரர்கள் அல்லாத சுமார் ஐம்பதாயிரம் அமெரிக்கர்கள் அந்நாட்டின் அமைதிக்கும் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு ஆதரவாகவும் இருக்கவிருப்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால், அமெரிக்கப் படைவீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் கிறிஸ்தவர்கள் உட்பட புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்தார்.

ஈராக்கில் ஒருகாலத்தில் வளமையாய் இருந்த பழங்காலக் கிறிஸ்தவச் சமூகங்கள் தற்சமயம் அழியக்கூடிய கடும் ஆபத்தை எதிர்கொள்கின்றன என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

இதற்கிடையே, ஈராக்கிய அகதிகளுக்கு உதவுவதற்குத் தேவைப்படும் நிதியுதவியில் அறுபது விழுக்காட்டுக்குமேல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.அகதிகள் அவையின் உயர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.