2010-08-10 16:47:22

OMI  சபையின் இந்தியப் பணித்தளம் மாநிலம் என்ற நிலைக்கு உயர்கின்றது


ஆகஸ்ட்  10, 2010.      OMI  என்ற அமலமரி தியாகிகள் ஆண் துறவு சபையினர் இந்தியாவில் கண்டுவரும் வளர்ச்சியின் அடிப்படையில் அச்சபையின் இந்தியப் பணித்தளம் மாநிலம் என்ற நிலைக்கு இம்மாதம் 15ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.

இந்தியப் பணித்தளம், மாநிலம் என்ற நிலைக்கு உயர்த்தப்படும் இத்தீர்மானத்தை கடந்த ஏப்ரல் 23ம் தேதி இச்சபையின் பொது நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் அதன் அதிகாரப்பூர்வ நிகழ்வு வருகிற ஞாயிறன்று இடம்பெறவிருக்கின்றது.

இவ்விழா நிகழ்வுத் திருப்பலியை சென்னை கரையான்சாவடி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் சென்னை-மயிலைப் பேராயர் மேதகு சின்னப்பா தலைமை தாங்கி நடத்தவுள்ளார். இதில் உரோமைத் தலைமையகத்திலிருந்து இந்த OMI சபையின் அதிபர் அருள்திரு வில்கெம் ஸ்டெக்கிலிங் உட்பட அச்சபையோடு தொடர்புடைய பல ஆயர்களும் குருக்களும் பொதுநிலையினரும் கலந்து கொள்கின்றனர்.

இந்திய மாநிலம், இந்த அமலமரி தியாகிகள் சபையை ஆரம்பித்த புனித யூஜின் பெயரில் இயங்கவுள்ளது. இச்சபையினர் 1968ம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவில் பணியைத் தொடங்கினர். 1979ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி மண்டலம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டு இவ்வாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மாநிலம் என்ற நிலையை அடைகிறது.

கடந்த 43 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் சேவையாற்றி வரும் இச்சபையினரின் பணிவாழ்வில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.