2010-08-09 15:00:41

பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டுகள்


ஆகஸ்ட் 09, 2010 தமிழ்நாட்டின் தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நடத்தப்படவுள்ள கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக குஜராத்தில் இருப்பதாக கூறப்படும் ராஜராஜனின் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

உலகப்புகழ்பெற்றிருக்கும் தஞ்சை பெரிய கோவில் சோழப்பேரரசன் ராஜராஜனால் கட்டப்பட்டு இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, தமிழக அரசு செப்டம்பர் மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் பெரியதொரு விழா எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நாள் விழாவில் முதல் நாளில் தஞ்சை நகரில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், ஆயிரம் நாட்டிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் கருத்தரங்கங்களும் நடத்தப்போவதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஊடகம் ஒன்றுக்குச் செய்தி அளித்துள்ளார்.

தொல்லியல் ரீதியில் தஞ்சை பெரிய கோவில் பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் இந்திய அரசின் தொல்லியல் துறையின் உதவி தொல்பொருள் கண்காணிப்பாளரும் தஞ்சை பெரிய கோவில் குறித்த ஆய்வாளருமான பி எஸ் ஸ்ரீராமன் அவர்கள். பிரம்மாண்டமான அளவில் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பெரிய கோவில் இதுதான் என்று கூறும் ஸ்ரீராமன், இந்தியாவின் மற்ற பிரம்மாண்ட கோவில்களுக்கான அடிப்படை முன்மாதிரியாக இக்கோவில் திகழ்ந்திருக்கக்கூடும் என்றும் ஆயிரம் ஆண்டுகள் ஆனபிறகும் இதன் உறுதி சிறிதும் குறையவில்லை என்றும் அவர் கூறுகிறார்.








All the contents on this site are copyrighted ©.