2010-08-09 15:55:56

ஏலம் போகும் மனிதம்!


ஆக.09,2010. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் கிரேக்க நாட்டுத் தலைநகர் ஏத்தென்சின் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெருசலான தெரு ஒன்றில் நண்பகல் பன்னிரண்டு மணிவாக்கில் ஒரு முதியவர் தனது கையில் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு எதையோ மும்முரமாய்த் தேடிக் கொண்டிருந்தார். இவரைப் பார்த்த பலர் கிண்டலடித்துச் சிரித்தார்கள். இவரது செயலைக் கண்டு பொறுமையிழந்த ஒருவர் மட்டும் அந்த வயதானவரை நிறுத்தி, ஐயா எதைத் தொலைத்தீர்கள்? அதைத் தேட இந்தப் பட்டப்பகல் வெயிலில் தீப்பந்தம் தேவையா? என்று எரிச்சலுடன் கேட்டார். அதற்கு அந்த முதியவர், “தம்பி, மனிதனைத் தேடுகிறேன்” என்று அமைதியாகப் பதில் சொல்லிவிட்டுத் தனது தேடலைத் தொடர்ந்தார். இவர்தான் டயோஜினிஸ் (Diogenes) என்ற தத்துவ ஞானி. கொரிந்து நகரில் கி.மு.323ல் இறந்த இவரைப் போல் இன்றும் பல நேரங்களில் மனிதர்களைத் பட்டப்பகலில் தீப்பந்தம் கொண்டு தேட வேண்டியிருக்கின்றது. மனிதம் இழந்து அரக்கத்தனமாக மனிதர்களைக் கொன்று குவிக்கும் கொடூரச் சம்பவங்களைச் செய்தித் தாள்களில் வாசிக்கும் போது ஞானி டயோஜினிஸ் போல தேடல் வேட்டையைத் தொடருவதற்கு மனது துடிக்கின்றது.

ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 9. இந்தத் தேதிகள் உலகம் அறிந்தவருக்கு, குறிப்பாக ஜப்பானியருக்கு மறக்கமுடியாத வலிநாட்கள். மனிதா நீ எங்கே இருக்கிறாய், மனிதம் ஏலம் போய் விட்டதா போன்ற கேள்விகளை கேட்கும் நாட்கள். 1945ம் ஆண்டின் ஆகஸ்ட் 6 ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா, உலகின் முதல் அணுகுண்டைப் போட்டது. முதல் அணுகுண்டு விழுந்த அந்தக் காலை 8.15 மணிக்கு சுமார் எழுபதாயிரம் பேர் உடனடியாகப் பலியானார்கள். அந்நகரில் ஒருசில மாதங்களுக்குள் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர். இந்த நினைவு நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹிரோஷிமா அமைதி நினைவகத்தின் முன்பாக 74 நாடுகளின் பிரதிநிதிகள்கூடி உலக அமைதிக்காகச் செபித்தனர். கடந்த 65 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக கடந்த வெள்ளிதின நிகழ்வில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலரும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், பாதுகாப்பான உலகம் அமைவதற்கான ஒரேவழி உலகில் அணுஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவதே என்றார். உலகில் ஆயுதங்கள் ஒழிக்கப்படுவதற்கு ஜப்பானிய இளையோர் தலைமை வகித்துச் செயல்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

RealAudioMP3

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி காலை 11 மணி 2 நிமிடங்களுக்கு நாகசாகி நகரில் அமெரிக்கா மீண்டும் ஓர் அணுகுண்டைப் போட்டது. உடனடியாக எண்பதாயிரம் பேர் இறந்தனர். இதன் நினைவாக இத்திங்களன்று நாகசாசி நினைவகத்தில் பிரிட்டன் பிரான்ஸ் உட்பட 32 நாடுகளின் பிரதிநிதிகள் கூடியிருந்து ஒருநிமிட மௌனம் அனுசரித்தனர். மனிதன் காரணமான இந்தப் பேரவலத்தால் மொத்தத்தில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். இவை நடந்து 65 ஆண்டுகள் ஆகியும் இன்றும் ஜப்பானில் அவற்றின் கதிர்வீச்சுப் பாதிப்புகள் மனித உயிர்களைக் காவு கொண்டு வருகின்றன என்று சொல்லப்படுகின்றது.

எண்ணற்ற மனித உயிர்களைப் பறிகொடுத்த மனவலி ஜப்பானில் நினைவுகூரப்பட்ட இந்த நாட்களில்கூட ஈராக்கில் தற்கொலை வெடிகுண்டுகளின் சப்தம் நிறுத்தப்படவில்லை. இஞ்ஞாயிறன்றுகூட கார் வெடிகுண்டு வன்முறையில் 12 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானப் பணிகளைச் செய்துவந்த பத்துப்பேர் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ள இவர்களில் ஆறு பேர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜெர்மானியர் மற்றும் ஒருவர் பிரிட்டானியர். இன்னும் இரண்டு பேர் உள்ளூர் வாகன ஓட்டிகள். இவர்கள் IAM என்ற சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட சர்வதேச கிறிஸ்தவப் பிறரன்புப் பணி அமைப்பைச் சார்ந்தவர்கள். தங்கள் நாடுகளில் நல்ல ஊதியத்தில் வேலை பார்த்து வந்த இந்த மருத்துவர்கள், துன்புறும் ஆப்கான் மக்களுக்கு மருத்துவ மற்றும் பிற உதவிகளைச் செய்வதற்கெனச் சென்றவர்கள். இவர்கள் கிறிஸ்தவ மறைபோதகர்கள், அதனால் கொலை செய்தோம் எனத் தலிபான் அமைப்பு கூறியுள்ளது. ஆனால் இதற்கு மனிதநேயப் பணியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட கடந்த வெள்ளியன்றுகூட அவர்கள், கண்சிகிச்சை முகாமை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இதில் கொல்லப்பட்ட பிரிட்டன் மருத்துவர் வூ வின் மனிதநேயம் பற்றிப் பலர் பாராட்டிப் பேசியுள்ளனர்.

RealAudioMP3

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், இன்றைக்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல நாகரீகங்களைக் கொண்டிருந்த சிறப்பான நாடாகும். ஒருகாலத்தில் இது காந்தாரக் கலைகளுக்கும், உலர்பழ விளைச்சலுக்கும் புகழ் பெற்ற நாடாகவும் விளங்கியது. ஏழு முதல் 14ம் நூற்றாண்டு வரை அலெக்சாண்டர், ஜெங்கிஸ்கான், தைமூர் போன்றோரின் ஆக்ரமிப்புக்கு இரையானது. 19ம் நூற்றாண்டில் பிரிட்டனுக்கும் இரஷ்யாவுக்குமிடையேயான போரின் களமானது. 1919ல் சுதந்திர நாடானது. ஆனாலும் இந்நாட்டின் அண்மை வரலாறு போர்களும் உள்நாட்டுக் கலவரங்களும் நிறைந்தது. 1996ல் தலிபான் காபூலைக் கைப்பற்றியது. 2001ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க் இரட்டைக் கோபுரத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதன்பின், ஆப்கானிலுள்ள அல்கெய்தா வலையமைப்பைத் தகர்க்க அமெரிக்கக் கூட்டணி இராணுவம் ஆப்கானில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின், தாலிபான்களின் பிடியிலிருந்து ஆப்கான் விடுவிக்கப்பட்டது. ஆயினும் இன்று திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் இராணுவ வீரர்கள். பயம் அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்களைத்தான் காண முடிகின்றது என ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இந்த இசுலாமியக் குடியரசு, தலிபான்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டுவிட்டாலும் இன்னும் அவர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது என்பதற்கு கடந்த வெள்ளியன்று அம்பலமாயிருக்கின்ற இவர்களின் மற்றொரு கொடுஞ்செயலும் சான்றாய் இருக்கின்றது.

ஆயிஷா என்ற 18 வயது இளம்பெண், கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காகத் தலிபான்கள், அப்பெண்ணின் மூக்கையும் காதையும் துண்டித்துள்ளார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆயிஷாவுக்குப் பத்து வயதாகும்போதே, அவரது தந்தை, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து அவரைப் பணத்துக்காக விற்பனை செய்து விட்டார். அதற்குப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஆயிஷாவின் கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் தினமும் அவரைக் கொடுமைப்படுத்தி வந்தனர். ஆதலால் வீட்டை விட்டு வெளியேறினார் ஆயிஷா. ஆனால் கடந்த ஆண்டு அவரது கணவர் ஆயிஷாவைக் கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் நீதிமன்றத்தின்முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. உயரமான மலைப் பகுதிக்கு ஆயிஷாவை அழைத்துச் சென்று, அவரின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரைக் கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின் அவரது கணவர் முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். பின்னர் அவரது மூக்கையும் துண்டித்தார். வலியால் கதறித் துடித்த ஆயிஷா இறந்து விடுவார் என நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு விட்டு போய்விட்டனர். ஆனால் காபூல் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தஞ்சம் அடைந்த ஆயிஷா, அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல, கலிபோர்னியாவிலுள்ள Grossman Burn என்ற அமைப்பு, ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்துள்ளது. எனவே தற்சமயம் ஆயிஷா கலிபோர்னியாவில் இருக்கிறார் என்று இத்திங்கள் பிபிசி ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெண்ணின் மாண்பையும் மனிதத்தையும் மதிக்காது அவற்றை ஏலம் விடும் மனித மிருகங்களுக்கு மத்தியில் இப்படியொரு நல்ல உள்ளங்கள்! நல்ல உள்ளங்கள் எங்கிருந்தாலும் வாழ்க!

மங்களூர் அண்மை விமான விபத்துச் செய்தியைக் கேள்விப்பட்டதுமே தன்னார்வலராக உடனடியாக ஓடிவந்தவர் 60 வயதான அப்துல் ஹமீத் அலி. இவர் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட அறுபது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். “ஊரே ஓலமிட்டுக் கொண்டிருக்க, வீட்டில் ஓய்வெடுக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை” என்று சொல்லியிருப்பவர் ஹமீது. மதம் மொழி இனம் கடந்து செயலாற்றும் சில ஹமீதுகள் இருக்கும்வரை சமுதாயத்தில் மனிதம் ஏலம் விடப்படாமல் தடை செய்யப்படும். உருவாகட்டும் பல ஹமீதுகள்.

மனிதம் எப்போது மலரும்? மனிதம் ஏலம் போகாமல் எப்போது நிறுத்தப்படும்? வானொலி நேயர்களே, இவை உங்களுக்கான கேள்விகள்.

தூய்மையானஅன்பு பிறக்கும் மனங்களில், பொறாமையும் பொல்லாப்பும் இல்லாத ஆன்மாவில், மதவெறியும் தீவிரவாதப்போக்கும் இல்லா இதயத்தில், கருணையும் அன்பும் ஊற்றெடுக்கும் உள்ளத்தில், தன்முனைப்பு தவிர்க்கப்படும் மனத்தில் மனிதம் மலரும். மனிதத்தை மாண்புறச் செய்யும் இந்தக் கருணை இதயம், அடுத்தவரை அரியணையில் அமர வைத்து மனம் குளிரும். அடுத்தவர் அறியாமல், அடுத்தவர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தைத் தவிர்த்துச் செயல்படும். செயல்பட்ட அடுத்த நிமிடமே அதை மறந்து விடும். பிறரது விழிநீரைத் துடைக்கும்.

கருணைக்கு எப்போதும் போட்டியில்லை. ஒருவரை எத்தனைபேர் வேண்டுமானாலும் கருணையுடன் நடத்தலாம். எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் ஒருவர் கருணை காட்டலாம். ஒருவர் கருணைமயமாக இருக்கும்போதுதான் அவர் அதிகபட்ச அழகை அடைகிறார். அந்த உள்ளம்தான் கங்கோத்ரியாக, தலைக்காவிரியாக மனிதத்தை வற்றா நதியாக்கி ஓடச் செய்யும். பலரது வாழ்வை வளமாக்கும்








All the contents on this site are copyrighted ©.