2010-08-07 15:36:11

பாகிஸ்தானில் வெள்ளத்தில் 12 மில்லியன் பேர் பாதிப்பு


ஆக.07,2010. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அளவு ஒரு கோடியே இருபது இலட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வெள்ளச்சேதம் தொடர்ந்தும் விபரீதமான அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருப்பதாக கூறும் ஊடகங்கள், ‘இது பாகிஸ்தான் சந்திக்கும் பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளன.

பாகிஸ்தானின் வடமேற்கில் துவங்கிய பேய்மழையும் பெருவெள்ளமும், நாட்டின் மத்திய பகுதிகளைத் தாண்டி, தெற்கிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தத் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமாகவும், நாட்டின் தொழில் தலைநகராகவும் வர்ணிக்கப்படும் கராச்சி நகர் அமைந்திருக்கும் சிந்து மாகாணத்தில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால், அங்குள்ள 11 மாவட்டங்களில் இருந்து ஐந்துலட்சம் மக்களை அதிகாரிகள் மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

சிந்து நதியை ஒட்டிய பகுதிகளில் இருந்து பத்து இலட்சம் மக்களை வெளியேற்ற தாங்கள் முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் மட்டும் 2 இலட்சத்து 63 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

நாட்டின் வடமேற்கில் இந்த வெள்ளம் காரணமாக, கடந்த ஒருவாரத்தில் 1600 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருகிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.