2010-08-07 16:09:37

ஆகஸ்ட் 08, நாளுமொரு நல்லெண்ணம்


1908ம் ஆண்டு, ஆகஸ்ட் 8 - வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார் என்று வரலாறு சொல்கிறது.
பறவைகளைப் போல் பறக்க வேண்டுமென்ற ஆசை மனிதர்களுக்கு ஆதிகாலம் முதலே இருந்தது. கிரேக்கப் புராணத்தில் தேதலுசும் (Daedalus) அவரது மகன் இகாருசும் (Icarus) பறவைகளின் சிறகுகளைத் தங்கள் மீது மெழுகால் ஒட்டவைத்துக் கொண்டு பறந்ததாகச் சொல்லப்படுகிறது. பறக்கும் அந்த அபூர்வ அனுபவத்தில் மிகவும் மூழ்கிவிட்ட இகாருஸ், சூரியனுக்கு அருகில் பறந்ததாகவும், சூரிய வெப்பத்தால் மெழுகு உருகி, அவரது சிறகுகள் கழன்று, அவர் வானிலிருந்து கீழே விழுந்து இறந்ததாகவும் இந்த புராணம் கூறுகிறது.
பறவைகளிடமிருந்து பறக்கும் பாடங்களைக் கற்றுக்கொண்ட நாம், பறவைகளின் வேறு பல குணங்களைப் படித்துக் கொண்டோமா என்பது பெரிய கேள்விக் குறிதான்.
கூட்டமாய், ஒன்றுக்கொன்று உதவியபடி, பல மைல்கள் பறக்கும் நாரைகளிடம் நாம் என்ன கற்றுக் கொண்டோம்?
பகிர்ந்துண்ணும் காக்கைகளிடம் நாம் என்ன கற்றுக் கொண்டோம்?
தொழில் நுட்பத்துடன், கலை நயத்தையும் இணைத்து தன் கூடுகளைக் கட்டும் தூக்கணாங்குருவிகளிடம் நாம் என்ன கற்றுக் கொண்டோம்?பறவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை பல ஆயிரம் பாடங்கள்.







All the contents on this site are copyrighted ©.