2010-08-06 16:17:52

மனித வாழ்வின் புனிதத்தைப் பாதுகாப்பதற்குப் புதிய வழிகள் கண்டுபிடிக்கப்படுமாறு WCC வலியுறுத்தல்


ஆக.06,2010. மனித வாழ்வின் புனிதத்தைப் பாதுகாப்பதற்கு அரசுகளும் பொது மக்கள் சமுதாயமும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்குமாறு WCC என்ற உலக கிறிஸ்தவ மன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டதன் 65வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட WCC மன்றப் பொதுச் செயலர் Olav Fykse Tveit, நாம் எல்லாரும் வாழ்வு பெறும்படியாக, நாம் வாழ்வைத் தேர்ந்தெடுக்குமாறு விவிலியம் வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அணுகுண்டுகள் இன்னும் உலக சமுதாயத்துக்கு அச்சுறுத்தலாக இருந்து நிலையான அமைதியைப் புறக்கணித்து வருகின்றன என்றுரைக்கும் அவ்வறிக்கை, 1945ம் ஆண்டிலிருந்து உலகில் அணுஆயுதங்கள் குறித்து இருவேறுபட்ட போக்குகள் இருந்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி உள்ளூர் நேரம் காலை 8.15க்கு அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டை வீசியதில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர். இது நடந்து மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி நகர் மீதும் அணுகுண்டு வீசப்பட்டது. மொத்தத்தில் இவற்றால் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர், அவற்றின் கதிர்வீச்சு தாக்கங்களினால் மக்கள் இன்னும் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.