2010-08-06 16:13:56

கென்ய நாட்டுப் புதிய அரசியல் அமைப்பிலுள்ள அறநெறி சார்ந்த குறைகள் அகற்றப்பட ஆயர்கள் வேண்டுகோள்


ஆக.06,2010. கென்ய நாட்டின் புதிய அரசியல் அமைப்பை அந்நாட்டினர் தங்களது கருத்து வாக்கெடுப்பு மூலம் ஏற்றுள்ளதை வரவேற்றுள்ள அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், அந்த அமைப்பிலுள்ள அறநெறி சார்ந்த குறைகள் அகற்றப்பட வேண்டுமென்று கேட்டுள்ளனர்.

கென்ய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் John Njue கையெழுத்துடன் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ள ஆயர்களின் அறிக்கையில், நல்லதோர் அரசியல் அமைப்பு செயல்படுத்தப்படுவதற்குச் செபிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்வை மதித்து சமய சுதந்திரத்தின் நியாயமான கூறுகளைப் பாதுகாத்து குடும்பங்களைத் தாங்கிப் பிடிக்கும் விதத்தில் இந்தப் புதிய அரசியல் அமைப்பு செயல்படுத்தப்படுமாறு ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கென்யாவின் புதிய அரசியல் அமைப்பு, கருக்கலைப்பை ஆதரிக்கின்றது மற்றும் இசுலாமிய நீதிமன்றங்கள் உருவாக அனுமதியளிக்கின்றது என்பதன் அடிப்படையில் அதனை நிராகரிக்குமாறு ஆயர்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.