2010-08-06 16:21:12

இந்தியாவில் வயிற்றுப்போக்கால் தினமும் 1000 குழந்தைகள் மரணம்


ஆக.06,2010. இந்தியாவில் "வயிற்றுப்போக்கால் மட்டும் தினமும் ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர்' என தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வார விழா ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

சிவகாசியில் இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் சார்பில் சிறப்பிக்கப்பட்ட இந்த வார விழாவில் பேசிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழந்தைகள் பிரிவு இயக்குனர் கண்ணன், இந்தியாவில் அறுபது விழுக்காட்டுப் பெண்கள் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை. இதனால் 47 விழுக்காட்டுக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகின்றன என்றார்.

ஊட்டச்சத்து குறைவில் உலக அளவில் இந்தியா 2வது இடம் வகிக்கிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் ஆண்டுக்கு இரண்டு கோடியே பத்து இலட்சமும், வயிற்றுப் போக்கால் தினமும் ஆயிரம் குழந்தைகளும் இறக்கின்றன என்றும் அவர் அறிவித்தார்.

குழந்தைக்கு தினமும் 500 முதல் 600 கிலோ கிராம் கலோரி சத்து தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு பவுடர் பால் கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படும். அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் "குழந்தை நட்பு மருத்துவமனை' என்ற பிரிவை ஏற்படுத்தி தாய்ப்பால் மகத்துவம் பற்றி பெண்களிடம் விளக்க வேண்டும் என்றும் கண்ணன் பரிந்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.