2010-08-03 15:54:22

விவிலியத் தேடல்


RealAudioMP3
“Hello, எப்படி இருக்கிறீர்கள்?” என்று நலம் விசாரிப்பது எல்லா நாட்டுக் கலாச்சாரத்திலும் உள்ள ஒரு பழக்கம் என்று நினைக்கிறேன். “எப்படி இருக்கிறீர்கள்?” என்று யாரையாவது நாம் கேட்டால், "நான் நலம். நீங்க நலமா?" என்ற பதிலைத்தான் எதிர்பார்ப்போம். அதற்குப் பதிலாக, ஒரு சிலர் வித்தியாசமான பதிலைத் தரலாம். "ஹூம்.. அதை ஏன் கேக்குறீங்க?... நேத்துலருந்து தலை வலி பிச்சி எடுக்குது. மாத்திரை சாப்பிட படுக்கையை விட்டு எழுந்தா, தலை 'கிர்'னு சுத்துது... சரி, மகனைக் கூப்பிடலாம்னு பார்த்தா, அவன் காதுல ஒரு headphoneஐ மாட்டிகிட்டு, Cellல பேசிகிட்டேயிருக்கான்."
இப்படி, தன் உடல் குறைகள், தன் குடும்பத்தில் உள்ள குறைகள் என்று ஒரு பட்டியலை நீட்டும் மனிதர்களையும் நாம் சந்தித்திருக்கிறோம். அடுத்த முறை அவர்களிடம் "எப்படி இருக்கிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பவே தயங்குவோம்.
இப்படி உள்ளம் முழவதும், எந்நேரமும் குறைகளை நிறைத்து வைத்திருக்கும் இந்த உள்ளங்கள் திருப்பாடல் 23ன் முதல் வரிகளை மனதார, வாய் விட்டுச் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.
"ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறையில்லை." என்பது திருப்பாடல் 23ன் முதல் இரு வரிகள். "குறையேதும் எனக்கில்லை" என்ற அந்த வரியை இன்று நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க முயல்வோம்.

திருப்பாடல் 23ன் முதல் இரு வரிகளும் பல வழிகளில், பல பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன.
ஆண்டவர் எனது நல்லாயன். ஆகவே எனக்கொரு குறையுமிராது.
ஆண்டவர் என் ஆயன். ஏது குறை எனக்கு?
ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார். இனி எனக்குக் குறைகள் ஒன்றும் இல்லையே.
எனது ஆயனாய் இறைவன் இருக்கிறார். மனது மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறார்.
என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது, என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
இப்படி ஒரு கூற்றாக, ஒரு கேள்வியாக பல வழிகளில் சொல்லப்பட்டுள்ள இவ்விரு வரிகளும் சொல்ல விழைவது என்ன? இறைவன் இருக்கிறார். குறைகள் இருக்காது.

ஆங்கிலத்தில் வழக்கமாக இந்த இரு வரிகளை "The Lord is my Shepherd. I shall not want." என்று சொல்வோம். இதே இரு வரிகளைக் ஒரு சிலர் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார்கள். "The Lord is my Shepherd. What more do I want?" அதாவது, “ஆண்டவர் என் ஆயர். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?”
'இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்' என்பது... இதுவரை கனவில் மட்டுமே கண்டு வந்த ஒரு வாழ்க்கை, ஒரு வாழ்க்கைத் துணை, அல்லது வேலை, அல்லது வீடு என்று தன் கனவை நனவாக்கியவர்கள் சொல்லும் ஒரு கூற்று. அல்லது தன் பிள்ளையை படிக்க வைத்து, உயர்ந்ததொரு இடத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும் பெற்றோர் 'இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்' என்று சொல்லக்கூடும்.
இப்படி ஒரு பாசத்தால், காதலால், நட்பால்... பொதுவாக, ஆழ்ந்த ஓர் உறவால், அதிலிருந்து பிறக்கும் நிறைவால் சொல்லப்பட்ட வரிகள்: "ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறைகள் இல்லை." அல்லது... “ஆண்டவர் என் ஆயர். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?”

Yeh Dil Maange More! இந்த உள்ளம் இன்னும் அதிகம் கேட்கிறதே... என்ற விளம்பர வரி நம் அனைவரின் ஆழ் மனதில் குடி கொண்டுள்ள வரி. பள்ளிப் பாடங்களைச் சரிவர சொல்ல முடியாத குழந்தையும் இந்த வரியைச் சரியாக சொன்ன ஒரு காலம் உண்டு. அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய வரி இது. விளம்பர உலகம் எதிர்பார்ப்பதே இது தானே. மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
‘வேண்டும் இன்னும் வேண்டும்’ எனும் தீராத தாகத்தை நமக்கு உண்டாக்கி, நம்மை அதிகமாய்ச் சேர்த்துவைக்கத் தூண்டும் விளம்பரக் கவிதை ஓலங்களின் மத்தியில், இறைவன் இருந்தால் போதும், வேறு எதுவும் எனக்கு வேண்டாம் என்று மென்மையாய் ஒலிக்கும் திருப்பாடல் 23ன் முதலிரு வரிகள் விளம்பர உலகினரைச் சங்கடத்தில் நெளிய வைக்கும் வரிகள்.

வேண்டும், இன்னும் வேண்டும் என்ற ஆசை எப்போதும் ஒரு மனதில் தனியே குடிகொள்வதில்லை. இந்த ஆசையோடு சேர்ந்து திருப்தியில்லாமை, இருப்பவரைப் பார்த்து பொறாமை, பேராசை என்று ஒரு கூட்டுக் குடித்தனமே அந்த மனதில் ஆரம்பமாகிவிடும்.
இந்தக் கூட்டுக் குடித்தனம் நடைபெறும் மனதிலிருந்து எழும் செபம் எப்படி இருக்கும்? வருடம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் இறைவனை ஒரு கிறிஸ்மஸ் தாத்தாவாக மட்டும் கற்பனை செய்து, இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்ற பட்டியல் மட்டுமே செபமாகி விடும். இப்படி நீளும் செபப் பட்டியல்களுக்குப் பின் கேட்டவை கிடைக்கவில்லை என்றால், கடவுள் நம்பிக்கை குறையும், கோவில், மதம் எல்லாம் காணாமல் போய்விடும்.
இல்லாததற்காய் ஏங்குவதைக் காட்டிலும், இருப்பதற்கு நன்றி சொல்வதற்கே எல்லா மதங்களும் சொல்லித் தருகின்றன. வாழ்வில் உள்ள நிறைகளை மறந்து விட்டு குறைகளை மட்டும் நினைத்து வாழ்வதை எந்த மதமும் சொல்லித் தருவதில்லை.
நான் சிறுவனாய் இருந்த போது, ஒரு பங்குத் தந்தை எங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் மறை கல்வி வகுப்புகள் நடத்தினார். ஒரு நாள் அவர் எங்கள் வகுப்புக்கு ஒரு பெரிய வெள்ளை அட்டையைச் சுருட்டி எடுத்து வந்தார். அந்த அட்டையை எங்கள் முன் விரித்துக் காட்டினார். அந்த அட்டையில் ஒரு மூலையில் கருப்பாய் ஒரு புள்ளி இருந்தது. பங்கு குரு அந்தத் தாளை விரித்து பிடித்த படியே, "இங்கு என்ன பார்க்கிறீர்கள்?" என்று எங்களிடம் கேட்டார். நாங்கள் எல்லாரும் கூட்டமாக, "அதோ அந்தக் கறுப்புப் புள்ளி." என்று கத்தினோம். "நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்." என்று குரு மீண்டும் கேட்டார். மீண்டும், மீண்டும் நாங்கள் அந்தப் புள்ளியைக் காட்டி கத்திக் கொண்டிருந்தோம். அப்போது அவர், "குழந்தைகளே, இவ்வளவு பெரிய வெள்ளைத் தாள் உங்கள் கண்களில் படவில்லை. ஆனால், அந்தக் கறுப்புப் புள்ளி மட்டும் உங்கள் கண்களில் பட்டது. இதுபோல், வாழ்க்கையிலும் எவ்வளவோ நல்ல காரியங்களை நாம் பார்க்காமல், சின்னச் சின்னக் குறைகளை மட்டும் பார்க்கிறோம். அப்படி செய்யக் கூடாது." என்று சொல்லித் தந்தார்.
இன்னும் என் உள்ளத்தில் ஆழமாய் பதிந்துள்ளது அந்தப் பாடம். ஆனால், எவ்வளவு தூரம் அதை வாழ்வில் கடைபிடித்திருக்கிறேன் என்பது கேள்விக் குறிதான்.

நமக்குத் தெரிந்த ஒரு கதையோடு நமது இன்றையத் தேடலை நிறைவு செய்வோம். எளிமையாய் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு தொழிலாளிக்கு முன் தேவதை ஒருநாள் தோன்றி, தங்க நாணயங்கள் இருந்த ஒரு பானையைப் பரிசாகக் கொடுத்துச் சென்றார். தொழிலாளிக்கு தலை கால் புரியாத மகிழ்ச்சி. காலையில் எழுந்ததும், முதல் வேலையாய் அந்தப் பானையைத் திறந்து பார்த்தார். உள்ளிருந்த தங்க நாணயங்கள் எல்லாம் அவரைப் பார்த்துக் கண் சிமிட்டின. அவரது மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. காரணம்... பானை முழவதும் தங்க நாணயங்களால் நிரம்பியிருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இடம் இருந்தது. எப்படியும் அந்தப் பானை முழுவதையும் தங்க நாணயங்களால் நிரப்பிவிட தொழிலாளி முயன்றார். தன்னிடம் இருந்த எல்லாப் பொருட்களையும் விற்று, அவற்றைத் தங்க நாணயங்களாக்கிப் பானையில் போட்டார். இன்னும் இடம் இருந்தது. இரவும் பகலும் உழைத்தார். தன் உணவைக் குறைத்தார். தன் மனைவி, குழந்தைகள் உணவைக் குறைத்தார். இப்படி சேர்த்தப் பணத்தை எல்லாம் தங்க நாணயங்களாக்கிப் பானையில் போட்டார். பானை நிறையவில்லை.
நாளுக்கு நாள் மெலிந்து, கவலையுடன் காணப்பட்ட அந்தத் தொழிலாளியைச் சந்தித்த அவரது நண்பர் காரணம் கேட்டார். தொழிலாளி தனக்குக் கிடைத்த அந்தத் தங்க நாணயப் பானையைப் பற்றிக் கூறினார். உடனே நண்பர், "அந்தப் பானையை நானும் சில காலம் வைத்திருந்தேன். அந்தப் பானையின் மகிமையே இதுதான். என்னதான் நீ முயன்றாலும், அந்தப் பானை நிறையவே நிறையாது." என்றார்.
குறைவாய் இருந்த பானையை நிறைப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தத் தொழிலாளி, அந்தப் பானையில் இருந்த ஒரு தங்க நாணயத்தையும் தன் மகிழ்வுக்காகப் பயன்படுத்தவில்லை. வாழ்வில் உள்ள குறைகளை நிறைவு செய்வதிலேயே நம்மில் எத்தனை பேர் வாழ்வு முழுவதையும் கழித்து வருகிறோம். குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவைகளை விட, நம்மிடம் உள்ள நிறைகள் கட்டாயம் அதிகம் இருக்கும். குறைகளுள்ள வாழ்வில் இறைவன் நமது துணையாய், ஓர் ஆயனாய் வரும் போது, அதை விட வேறென்ன வேண்டும் நமக்கு?







All the contents on this site are copyrighted ©.