2010-08-03 15:58:11

ஜப்பான் மேயர், இன்னும் ஆறு பேருக்கு ரமோன் மகசேசாய் விருது


ஆக.03,2010.ஆசியாவின் நொபெல் விருது என அழைக்கப்படும் ரமோன் மகசேசாய் விருது, ஜப்பான் மேயர் இன்னும் ஆறு பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக ஜப்பானில் மேயராகப் பணியாற்றும் Tadatoshi Akiba, உலக அளவில் அணுஆயுதங்கள் களையப்படுவதற்கு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி இவருக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது அந்நாட்டின் ஹிரோஷிமா நகர்மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டபோது இவர் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தவர் மற்றும் இவரது வீடும் இவ்வணு குண்டுக்குப் பலியானது.

மேலும், சீன அரசின் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில், சுற்றுச்சூழல் மாசுக்கேட்டை ஆவணப்படமாக எடுத்த அந்நாட்டுப் புகைப்படக்காரர், மற்றுமொரு சீனச் சுற்றுச்சூழல் ஆர்வலர், பிலிப்பைன்ஸ் அறிவியல் ஆசிரியத் தம்பதியர், பங்களாதேஷ் தொழிற்துறை உரிமையாளர் என மொத்தம் ஏழு பேர் இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசாய் விருதைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

விமான விபத்தில் இறந்த பிலிப்பைன்ஸின் முன்னாள் அரசுத்தலைவர் பெயரில் வழங்கப்படும் இவ்விருது இம்மாதம் 31ம் தேதி மனிலாவில் வழங்கப்படும்.







All the contents on this site are copyrighted ©.