2010-08-02 16:05:01

கிழிக்கமுடியாத நெருப்புச்சுருள்


ஆகஸ்ட்02,2010. இப்பூவுலகில் பிறக்கும்போது எல்லாரும் நல்ல குழந்தைகளாகத்தான் பிறக்கிறோம். ஆனால் ஏனோ வளர்ந்த பின்னர் “அந்த நல்லவன், நல்லவள்” என்ற பெயர் எல்லாருக்கும் கிட்டுவதில்லை. சிலரது வாழ்க்கைமுறை மனது பதறும்படியாக, உடம்பு உதறும்படியாக அமைந்து விடுகிறது. இந்தவாரம் அலசல் நிகழ்ச்சிக்காகக் கடந்த வாரச் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த போது ஒன்றிரண்டு நிகழ்வுகள் நம் இரத்தத்தை உறைய வைத்தன. நெஞ்சைப் பிழிந்தெடுத்தன. அதேசமயம் சில நல்ல, ஆறுதலான செய்திகளும் இடம் பெற்றிருந்தன. எடுத்துக்காட்டுக்கு, இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைக் காவு கொண்ட கொத்து வெடிகுண்டுகள் குறித்த ஐ.நா. தடை ஒப்பந்தம் ஆகஸ்ட் முதல் தேதி இஞ்ஞாயிறிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

RealAudioMP3

இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தொடங்கிய இந்தக் கொத்து வெடி குண்டுகளால் கொல்லப்பட்டவர்களில் ஏறக்குறைய 98 விழுக்காட்டினர் அப்பாவி பொதுமக்கள். இவர்களில் மூன்றில் ஒருபகுதியினர் குழந்தைகள். இவைகள் ஒவ்வொன்றிலும் 200 குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் தண்ணீர் குடிக்கும் குவளை அளவைக் கொண்டவை. இவை வீசப்பட்டவுடன் ஒன்பது மைல்கள் தூரம்வரை சென்று பின்னர் அவற்றிலுள்ள சிறு குண்டுகள் வெடித்துச் சிதறும். நூறு மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர் வரையிலான உயரத்தில் வெடித்துச் சிதறும். இத்தகைய போர்க்கால ஆயுதங்கள் தயாரிப்பது, பயன்படுத்துவது மற்றும் அவற்றைச் சேமித்து வைப்பது இந்த ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து உலகில் தடை செய்யப்பட்டிருக்கின்றது. அடுத்து, தண்ணீரும் கழிவறை வசதியும் மனிதனின் அடிப்படை உரிமை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் கடந்த வியாழனன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், வரலாற்றில் இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்களைக் கொன்று குவித்த கொடுங்கோல் அதிகாரிகளில் ஒருவருக்கும் கடந்த வாரத்தில் தண்டனை கிடைத்திருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஐ.நா.வின் நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம், கம்போடியாவின் முன்னாள் சிறை அதிகாரி Kaing Guek Eav என்பவருக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது. அதுவும் இவர் போர்க்காலக் குற்றங்கள் புரிந்து ஏறத்தாழ 31 ஆண்டுகள் கழித்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்கள் பாதிக்கப்பட்ட கம்போடிய மக்களின் எண்ணங்களை வெளியிட்டன. “இவனுக்கு தொழிலே கொலைதான்” என்று சொல்லுமளவுக்கு இருபது இலட்சம் சொந்த மக்களையேக் கொன்றக் கொடூரன்! தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த முன்னாள் கணக்கு வாத்தியார் பற்றி அவரது முன்னாள் மாணவியும், தற்போதைய கம்போடிய பெண்கள் அமைப்பின் தலைவருமான Channary விளக்குகிறார்

கம்போடியாவில் 1975க்கும் 1979 க்கும் இடைப்பட்ட காலத்தில் போல்பாட் என்ற பிரதமர் Khmer Rouge கம்யூனிச கொடுங்கோல் ஆட்சியை நடத்தினார். அந்த ஆட்சியை நினைத்தாலே இன்றும் கம்போடிய மக்களுக்கு மனது பதறும், உடம்பு உதறும். அவ்வளவு கொடூரமான ஆட்சி. அச்சமயத்தில் அரசுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் கொலைக்களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 20 இலட்சம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடுங்கோல் ஆட்சியில் நான்காண்டுகள் சிறைத்துறை அதிகாரியாக இருந்தவர் காம்ரேட் டச் Comrade Duch என அழைக்கப்பட்ட கெய்ங் குயெக் ஈவ்தான். இவர் தனது தலைமையில் பதினேழாயிரம் பேரைக் கொடூர சித்ரவதைகளுக்கு ஆளாக்கிக் கொன்று குவித்தார். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லாத் தரப்பினரும் உண்டு.

இந்தக் கம்போடியா நாட்டில் நடந்த வன்கொடுமைகள் பற்றி மேலும் பார்ப்போமே. தென்கிழக்கு ஆசிய நாடாகிய இந்த கம்போடியா முற்காலத்தில் கம்பூச்சியா என அழைக்கப்பட்டது. இந்நாட்டின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. இந்நாட்டில் இடம் பெற்ற பல ஆண்டுகள் போருக்குப் பிறகு கெமர் ரூஜ்ஜின் கெரில்லாப்படை 1975ல் தலைநகரைக் கைப்பற்றியது. அதுமுதல் நான்காண்டுகள் கெமர் ரூஜ் அரசுதான் கம்போடியாவை ஆண்டது. போல்பாட் தன்னைப் பிரதமராக அறிவித்துக்கொண்டார். பணக்காரர்கள், முதலாளிகள் எல்லாம் கிராமப்புறங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, உள்ளூர் மக்களுடன் தங்க வைக்கப்பட்டனர். கட்டாயப்படுத்திக் கூட்டு விவசாயத்தில் ஈடுபடவைத்தனர். சமத்துவம் என்ற பெயரால் அத்துமீறி நடைபெற்ற இந்த ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வங்கி, பணம் என்பதெல்லாம் அழிக்கப்பட்டு, அனைத்துத் தனியார் சொத்துகளும் கையகப்படுத்தப்பட்டன. இதை எதிர்த்தவர்கள் மற்றும் வேலை செய்ய முடியாதவர்களை எல்லாம் கொன்று குவித்தனர். இந்த நேரத்தில்தான் காம்ரேட் டச், டுவோல் சிலெங் சிறைச்சாலை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்புக்கு வந்ததும் இவர் செய்த முதல் வேலை, நகர மையத்தில் ஒரு பள்ளியைக் கைப்பற்றி, சிறைச்சாலை ஆக்கியதுதான். கெமர் ரூச் வீரர்கள் சந்தேகப்படும் யாரை வேண்டுமானாலும் பிடித்து இங்கே கொண்டுவருவார்கள். ஆசிரியர்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள், சில வெளிநாட்டவர்கள் என ஏராளமானோர் இங்கே கொண்டுவரப்பட்டனர். அப்படி வருகிறவர்களை முதலில் புகைப்படம் எடுத்து, அவர்களின் எடை அளவு பார்க்கப்படும். பின்னர்தான் விசாரணை. அப்போது கெமர் ரூச் அரசுக்கு விசுவாசமாக இல்லாததற்கு வருத்தம் தெரிவித்து எழுதித் தரும்படி வற்புறுத்துவார்கள். சரியென்று எழுதிக்கொடுத்தால் விட்டுவிடுவார்கள் என்று எண்ணிவிடக்கூடாது. இப்படி எழுதிக் கொடுத்தவர்களை, உளவாளிகள் என்று கூறி ஒரு மாதம் கொடும் சித்ரவதை செய்து, கடைசியில் எல்லோரையும் தலைநகரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொலைக் களத்துக்கு கொண்டுசென்று, போட்டுத் தள்ளிவிடுவார்கள். இது எல்லாமே காம்ரேட் டச்சின் மூளை போட்ட திட்டம்தான். அவரது சிறையில் இருந்து உயிருடன் வெளிவந்தவர்கள் வெறும் 13 பேர்தான். அதில், இப்போது மூன்று பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். ஒருநாள் 'ராஜ துரோகிகளின் மனைவிகள், மற்றொருநாள் ஆலைத்தொழிலாளிகள் மட்டும், இன்னொரு நாள் குழந்தைகள் ஸ்பெஷல் என்று கொடூரக் கொலைகளுக்குக்கூட வகையறா பிரித்து வைத்திருந்தான் இந்த முன்னாள் வாத்தியார்.

இப்படி நாளுக்குநாள் கெமர் ரூச் அரசின் அட்டகாசம் அதிகரிக்கவே, அண்டை நாடான வியட்நாம், கம்போடியா நாட்டுடன் போர் தொடுத்து கெமர் ரூச் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. போல்பாட் மற்றும் முக்கியத் தலைவர்கள் தென்மேற்கு கம்போடிய காட்டுப் பகுதிக்குத் தப்பி ஓடினர். காம்ரேட் டச் தன் பெயரை மாற்றிக்கொண்டு கிராமங்களில் தலைமறைவாக வாழத் தொடங்கினார். கம்போடியாவில் இருந்து வியட்நாம் படைகள் வெளியேறியபோது, மீண்டும் போல்பாட் கிளர்ச்சியில் ஈடுபட அவரை கம்போடிய அரசு கைதுசெய்து வீட்டுச் சிறையில் அடைத்தது. எந்தவித விசாரணைக்கும் ஆளாகாமல், வீட்டுச் சிறையிலேயே 1998ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். இதேபோன்று சில மேல்மட்டத் தலைவர்களும் இறந்துவிட்டனர்.

இந்த நிலையில்தான், 1999ம் ஆண்டு பிரிட்டன் பத்திரிகையாளரால் கண்டுபிடிக்கப்பட்டு காம்ரேட் டச் சிறைப்பிடிக்கப்பட்டார். இவர் மீது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட போர்க்குற்ற நீதிமன்றத்தில் 72 நாட்கள் விசாரணை நடந்தது. 24 தனிநபர்கள், 22 சமூக அமைப்புகள் சாட்சியம் அளித்தன. இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், 'சொந்த விருப்பத்தின் பேரில் செய்யவில்லை. மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவை நிறைவேற்றினேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். மன்னிப்பு அளிக்க வேண்டும்! என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நீதிபதிகள் இதை நிராகரித்து, அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தனர். அதைத் தொடர்ந்து கெமர் ரூச்சின் இரண்டாம் நிலைத் தலைவர்களாக இருந்த நுவோன் சியா, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் இயெங் சாரி, அவர் மனைவி இயெங் திரித் ஆகியோரும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது!

உப்பைத் திண்ணவன் தண்ணீர் குடிக்காமல் எத்தனை காலங்களுக்குத் தப்பித்துச் செல்ல முடியும்? நரபலி என்ற பெயரில் மதுரையைச் சேர்ந்த ஆண்குழந்தை ஒன்றைக் கடத்தி அதன் கழுத்தை அறுத்து இரத்தத்தை மண்சட்டியில் போட்டு வறுத்து ஒரு குழாயில் அடைத்து பின்னர் கடற்கரைக்குச் சென்று சடங்குகளைச் செய்த அப்துல்கபூர் தம்பதியரும், சென்னையில் நான்கு வயதுச் சிறுவனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பூவரசியும், பிரான்ஸ் நாட்டில் தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்துள்ள டொமினிக் கார்டேஸ் என்ற பெண்ணும் இவர்கள் போன்ற பலரும் நீதி தேவதையின் தண்டனையிலிருந்து தப்பவில்லை. மனித மனங்களில் கிழிக்க முடியாத நெருப்புச் சுருள்களாக இருந்தவர்கள்மீது நீதி தேவதையின் தராசு தண்டனை வழங்கியிருக்கிறது என்பது உண்மை.

ஆயினும், நீதி தேவதையே, சிலர் தண்டனையிலிருந்து தப்பித்து வாழ்கின்றனரே, உன் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டு இருப்பதால் கைத்தராசில் கவனம் செலுத்தமுடியாமல் இருக்கின்றாயோ! இதனாலோ என்னவோ சிலநேரம் தப்புத்தப்பாய்த்

தீர்ப்பு வழங்கிவிடுகிறாயோ. தர்மதேவதையே! எம் வீதிகள் தினமும் இரத்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட போது நீ எங்கிருந்தாய்! நிதி வாங்கிக் கொண்டு நீதிக்குக் குழி தோண்டும் நீதிபதிகளுக்கு நீ நிதிதேவதையாகத் தெரிகிறாயே! நீதி சொல்லும் தேவதையே, நியாயமதை நிலை நாட்டு என்று நேயர்களே உங்களில் பலர் சொல்வது கேட்கின்றது.

எனினும் நாம் சாலமோன் சொல்வது போன்று இப்படி வாழ்வோமா- நீதியையும், நேர்மையையும் நீ பற்றிக் கொள். ஞானம் வந்து உன்னைத் தொற்றிக் கொள்ளும். பின், உன் நுண்ணறிவும் மெய்யறிவும், உன் வழியை உருவாக்கும். உன் நிழல் விழும் ஓரமும் நீதியின் கரமாய் இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.