2010-08-02 15:42:43

ஆப்ரிக்காவில் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கென சேர்ந்து உழைக்க ஆப்ரிக்க ஐக்கிய அவையும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பும் ஒப்பந்தம்.


ஆகஸ்ட் 02, 2010. ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அமைதியை ஊக்குவிக்கவும் என சேர்ந்து உழைக்க ஆப்ரிக்க ஐக்கிய அவையும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான சான் எஜிதியோ குழுவும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளன.

மோதல்களைத் தடுப்பதற்கும் அவைகளுக்குத் தீர்வு காண்பதற்குமான ஆப்ரிக்க ஐக்கிய அவையின் வரையறைகளுக்கு உட்பட்டு அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சான் எஜிதியோவின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது இவ்வொப்பந்தம்.

வாழ்வு மதிப்பீடுகளையும் மனித மாண்பையும் ஊக்குவித்தல், மனித உரிமைகளை மதித்தல், வன்முறைகளை ஒதுக்குதல், ஏழ்மைக்கு எதிராகப் போராடுதல், எயிட்ஸ் நோய் குறித்தத் தகவல்களைப் பரிமாறுதல் போன்றவைகளில் இணைந்து உழைக்க இருதரப்பினரும் இசைவு அளித்துள்ளனர்.

கத்தோலிக்க அமைப்பான சான் எஜிதியோ குழு, மொசாம்பிக் நாட்டில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்ததும், பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் அமைதிக்காக உழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.