2010-07-31 15:37:19

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.
ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, மஹாராஷ்ட்ராவிலும் உணவுத் தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.
ஜூலை 27, 2010 - உச்ச நீதி மன்ற உத்தரவு: உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது. 
கடந்த பத்து நாட்களில் இந்தியப் பத்திரிகைகளில் வந்த ஒரு சில செய்திகளின் தலைப்புகள் இவை. இன்றைய நமது நற்செய்தியில் கூறப்பட்டுள்ள முட்டாள் செல்வந்தன் செய்த அதே தவறை இந்திய நாடும், நாம் அனைவரும் செய்கிறோமோ என்ற பிரமை எனக்குள் ஏற்படுகிறது.
"உங்களால் இந்தத் தானியங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவைகளைக் கொடுங்கள். உணவு தானியங்களில் ஒன்று கூட இனி பாழாகக் கூடாது." என்று ஜூலை 27 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.
யாருக்கு இந்த உத்தரவு? நமது இந்திய அரசுக்கு, Food Corporation of India என்றழைக்கப்படும் நமது இந்திய அரசின் உணவு நிறுவனத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்குக் காரணம்? இந்தியத் தானியக் கிடங்குகளில் 30 லட்சம் டன் தானியங்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன. அவைகளைத் தகுந்த விதத்தில் பாதுகாக்கும் வசதிகள் இல்லை என்று கூறி இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளை மண் தரைகளில், மழையில் அடுக்கி வைத்ததால், அவைகள் அழுகிக் கிடக்கின்றன.

இந்தச் செய்திகளைத் தனித்துப் பார்க்கும் போது, இவற்றின் விபரீதம் நமக்குச் சரியாகப் புரியாது. இவைகளை இந்தியாவில் இப்போது நிலவும் இன்னும் சில உண்மைகளோடு சேர்த்துப் பார்க்கும் போது, விபரீதம் புலப்படும். இந்தியாவில் 2009ம் ஆண்டு கணக்குப்படி, ஒவ்வொரு நாளும்... மீண்டும் சொல்கிறேன்... ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் இறந்தனர் என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது.. இந்தியாவில் தினமும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரமாய் இருக்கும். ஆனால், உணவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 6,000.
சேர்த்துவைக்க இடமில்லாமல் மழையில் குவிந்து அழுகிகொண்டிருக்கும் 30 லட்சம் டன் தானியங்கள் ஒரு புறம். பசியால், உணவில்லாமல் ஒவ்வொரு நாளும் இறக்கும் குழந்தைகள் மட்டும் 6,000. இந்த அநியாயம் இந்தியாவுக்குப் புதிதல்ல. இது போன்ற அநியாயங்களை நாம் அடிக்கடி கேட்டுப் பழகிப் போனதால், இவை நம்மை அதிகம் பாதிக்காமல் போகும் ஆபத்து உண்டு.

இருந்தாலும் பரவாயில்லை. நான் இன்னும் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 2001ம் ஆண்டு, இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் 9 கோடி டன் தானியம் முடங்கிக் கிடந்தது. 9 கோடி டன் என்பது எவ்வளவு தானியம்? இதை இப்படி புரிந்து கொள்ள முயல்வோம். இந்த உணவைக் கொண்டு, 20 லட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் உணவு கொடுக்கலாம். அவ்வளவு உணவு அது. இந்த அளவுக்கு அரிசியும், கோதுமையும் நமது கிடங்குகளில் குவிந்திருந்த அதே 2001ம் ஆண்டில், ஒரிசாவின் காசிப்பூர் மாநிலத்தில் பல ஆயிரம் பேர் பட்டினியால் இறந்தனர்.
"நம் நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவு மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள தவறான விநியோக முறையே! (a faulty PDS - Public Distribution System)!" என்று 2001ம் ஆண்டில் நாட்டின் பிரதமராய் இருந்த வாஜ்பாயி கூறினார். உற்பத்தியில் குறைவில்லை ஆனால், பகிர்வதில்தான் பல குறைகள் என்று நாட்டின் பிரதமரே சொன்னார்.

இந்தியாவை ஓர் 'ஏழை நாடு' என்று யார் சொன்னாலும் நான் ஏற்க மாட்டேன். ஏழைநாடு என்பதற்குப் பதில் 'எழையாக்கப்பட்ட நாடு' என்று சொல்வது மிகவும் பொருந்தும்.
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?"
நெற்றியில் அடிப்பதைப் போல் நேரடியாகக் கேள்வியைக் கேட்கும் ஒரு திரைப்படப் பாடல் இது. எத்தனையோ திரைப்படங்களில் நாம் சொல்லி வரும் கருத்துதான் இது. நம் நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மட்டும் வெள்ளைப் பணமாக்கி எல்லாருமே தங்கள் கடமையாகிய வரிகளை மட்டும் செலுத்தினால், நம் நாடு 'எங்கேயோ' போய்விடும்... எங்கும் போகாது... இங்கு, இந்த உலகத்தில் சொர்க்கத்தைப் பலருக்கு ஏற்படுத்தும் முதல்தர நாடாகிவிடும். அதற்குப் பதில் பணத்தை மூட்டைகளாய்க் கட்டி, அல்லது, மேத்தைகளாய்த் தைத்து... எப்படியெல்லாம் பதுக்கி, சேர்த்து வைக்க முடியுமோ அப்படியெல்லாம் சேர்த்து வைக்கிறோமே...
தேவைக்கு மேல் சேர்ப்பது நம் இந்திய மண்ணில் மிக ஆழமாய் வேரூன்றிப் போன ஒரு பண்பு போலும்... எனவே, இந்திய உணவு நிறுவனத்தை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

மீண்டும், ஜூலை 27 உச்ச நீதி மன்றம் அளித்த அந்த உத்தரவுக்கு வருவோம். "உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் அவற்றைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது கொடுங்கள்." என்று உச்ச நீதி மன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பை, உத்தரவைக் கேட்டு மனதில் வேதனை அதிகமானது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வார்த்தைகள் இவை. “ஏழைகளுக்காவது கொடுங்கள்” என்று உச்ச நீதி மன்றம் சொல்லும் போது, தானியக் கிடங்குகளில் சேகரிப்பது பற்றி ஒன்றும் தீர்ப்பு சொல்லாமல், அந்த சேகரிப்பை அவர்கள் சரியாகச் செய்யாததால், எழைகளுக்காவது கொடுங்கள் என்று சொல்லியிருப்பதுதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஒரு கூற்று.

ஜூலை 21, 23, 27 ஆகிய மூன்று நாட்களும் தானிய சேகரிப்பு குறித்து வெளிவந்த அந்தச் செய்திகளை முழுவதும் வாசித்தால், இன்னும் பல வேல்கள், அம்புகள் உள்ளத்தில் பாயும். உதாரணத்திற்கு, இந்திய உணவு நிறுவனம் FCI இன்னும் 130 லட்சம் டன் தானியங்களை வைக்கும் அளவுக்குத் தன் கிடங்குகளைப் பெரிதுபடுத்தி, விரிவாக்கப்பட்ட பகுதிகளைத் தனியாருக்கு வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது.
30 லட்சம் டன் தானியங்கள் வைப்பதற்கு இடமின்றி, வெளியில், மழையில் கிடப்பதாகச் சொல்லப்படும் அதே வேளையில், 130 லட்சம் டன் தானியங்களை வைப்பதற்கான இடங்கள் வாடகைக்கு விடப்படும் என்று சொல்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஒரு செய்தி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் FCIக்குச் சொந்தமான 6 கிடங்குகள் உள்ளன. இவைகளின் மொத்தக் கொள்ளளவு 30,000 டன். ஆனால், இந்தக் கிடங்குகளில் 9,000 டன் தானியங்களே வைக்கப்பட்டுள்ளன. கிடங்குகளில் வைக்கப்படாமல், 56,000 மூட்டைகள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 23ல் வெளிவந்த இந்த செய்தி நம் உள்ளத்தில் வேல் பாய்ச்சும் செய்தி.
உத்திரப் பிரதேசத்தில் இவ்வாண்டு மழை அளவு கணிசமான அளவு குறைந்துள்ளது. ஆனாலும், அங்கு கிடங்குகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள தானியங்களின் அளவு அந்தக் கிடங்குகளில் வைக்க முடியாத அளவு குவிந்துள்ளது. எனவே, வெளியில் கிடக்கும் இந்தத் தானியங்களை நாய்கள் சாப்பிடுகின்றன. ஒரு சில இடங்களில் நாய்களும் சாப்பிட முடியாத அளவு அவை அழுகிப் போயிருப்பதால், அவைகளைப் பூமிக்கடியில் புதைப்பதற்கு அரசு பணம் தருகிறது. இது ஜூலை 21 செய்தி வடிவில் வந்து, நம் உள்ளத்தில் பாய்ச்சப்பட்ட இன்னுமொரு வேல். நெஞ்சில் பாய்ந்த அம்புகள், வேல்கள் போதுமென்று நினைக்கிறேன்.

செய்திப் பரிமாற்றம் என்று நினைக்க வேண்டாம் அன்பர்களே. இந்தச் செய்திகளுக்குப் பின்னணியில் இருக்கும் நம் நாட்டின், நம் ஒவ்வொருவரின் சேர்த்துவைக்கும் போக்கை, அதுவும் தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைக்கும் போக்கைப் பற்றி சிந்திக்க இன்று நமக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் அந்த செல்வந்தன் நமக்கு இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார். தன் வயலில் உழைத்த ஏழைகளின் உழைப்பையெல்லாம் உறுஞ்சி தன் விளைச்சல்களைப் பல மடங்காக்கியிருக்கும் அந்தச் செல்வந்தன் தனக்குள் ஒரு கணக்கு போட்டான். அதை லூக்கா நற்செய்தி 12ம் அதிகாரம் இப்படிக் கூறுகிறது:

செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!என்று எண்ணினான். ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, ‘என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். 
அவன் போட்டக் கணக்கையெல்லாம் மாற்றி, கடவுள் போட்டக் கணக்கு இதோ:
ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். 
அந்தச் செல்வந்தனை ஒரு முட்டாள் என்று நாம் தீர்மானம் செய்வதற்கு முன், நம்மைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. ஒரு விரலால் பிறரைச் சுட்டிக்காட்டும் போது, மூன்று விரல்கள் நம் பக்கம் திரும்பியிருப்பதைப் பார்ப்பது நல்லது தானே!

Ernest Hemingway என்பவர் நொபல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம் தனிப்பட்டதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப் பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்க முடியும் என்றால், இவைகளுக்கு நான் சொந்தக்காரன். இவைகளை என்னால் கொடுக்க முடியாமல் நான் சேர்த்துவைத்தால், இவைகளுக்கு நான் அடிமை." என்று பதில் சொன்னாராம்.

தன் சொத்துக்கு அடிமையாகிப் போன செல்வந்தன் உவமையைச் சொன்ன இயேசு நமக்குத் தரும் எச்சரிக்கை இதுதான்:
பின்பு இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்: அவர்களை நோக்கி மட்டுமல்ல, அன்பர்களே, நம்மையும் நோக்கி இயேசு தரும் எச்சரிக்கை இது. கவனமாகக் கேட்போம்.எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது







All the contents on this site are copyrighted ©.