2010-07-30 15:22:30

ஜூலை 31. நாளும் ஒரு நல்லெண்ணம்


பஞ்சபூதங்கள்.

பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்ததே பிரபஞ்சம்

"நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''.

பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே இந்த உலகம் என்று தொல்காப்பியம் உரைக்கிறது.

ஆனால் பஞ்சபூதம் கலந்த பிரபஞ்சமோ பஞ்சம் கண்டு வெறுமையாய் நிற்கிறது.

காற்றை மாசுபடுத்தி, நீரை நிறம் மாற்றி, வானத்தில் துளையிட்டு, தீயை அழிவின் ஆதாரமாய் மாற்றி, நிலத்தையே நிர்மூலமாக்கிய செயல் யாருடையது?

சாலையில் கால் சுட நடக்கும்போது நிழலை அழித்தவர் மீது சினம் பொங்கத்தான் செய்கிறது.

ஆனால் அதே சினத்தை அடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச் செல்கிறோமே?

நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் இல்லையெனில் ஒன்றுமேயில்லை. எல்லாம் சூன்யமே.

இருப்பதை இல்லாமல் ஆக்குவது நம்மால் இயலாதது. ஆனால் அவைகளை இயலாதவைகளாக மாற்றுவது நம் இயல்பாகிவிட்டது.

அனைத்துக்கும் மூலமாய் நின்று, காக்கவும், நிலைக்கவும், அழிக்கவும் செய்யும் பஞ்சபூதங்களின் இன்றியமையாதத் தேவையை உலகம் உணர்ந்துள்ளதா?

பூதம் என்று கூறி பயமுறுத்துவர் குழந்தைகளை.

வாழ்வின் ஆதாரமாய் நிற்கும் ஐந்து பூதங்களையும் மனித இனத்தையே பயமுறுத்தும் பூதங்களாக உருமாற்றிய கொடுங்கலைஞர்கள் நாமே.

இதனை ஏற்றுக்கொள்ளும் நேர்மையாவது இன்னும் மிஞ்சியிருக்கிறதா?








All the contents on this site are copyrighted ©.