2010-07-30 16:12:26

இந்திய மக்கள்தொகை 2050ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு


ஜூலை30,2010: உலக மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும் என்று கூறப்படும் அதேவேளை, அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுவாக்கில் 800 கோடியை எட்டும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும்.

இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050-ல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் மக்கள்தொகை பெருக்கத்தைப் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம் என்றும் அம்மையம் கூறியுள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் 2050-ல் மக்கள்தொகை 210 கோடியாக அதிகரிக்கும். அமெரிக்காவிலும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இப்போது 31 கோடியாக உள்ள அமெரிக்க மக்கள்தொகை, 2050-ல் 39.9 கோடி அல்லது 45.8 கோடி அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இரஷியாவில் மக்கள்தொகை 2050 இல் குறையக் கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.