2010-07-26 15:40:39

ஜூலை 27 நாளும் ஒரு நல்லெண்ணம்


க.ப.அறவாணன் என்பவர், “தமிழகத்து மறுபக்கம்” என்ற தனது நூலில் தமிழரின் ஒரு தவறானப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார். 1967ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்து மக்கள் செயல்பட்ட விதம்தான் அறவாணன் சுட்டிக்காட்டியுள்ள அந்தத் தவறானப் போக்கு. ஆம். அந்தத் தேர்தல் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினாலும், அது தமிழக மக்களுக்கு ஒரு மறைக்கமுடியாத களங்கத்தையும் மாற்ற இயலாத சோகத்தையும் தந்தது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. அந்தத் தேர்தலில் கர்மவீரர் காமராஜர் தனது சொந்த ஊரிலேயே தோற்றுப் போனார். தமிழகத்தில் கல்விக் கண்களைத் திறந்தவர், தொழிற்வளர்ச்சிக்கு வித்திட்டவர், தனது வருவாய் அனைத்தையும் ஏழைகளுக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்குமெனச் செலவிட்டவர். கறைபடாதக் கைகளுக்குச் சொந்தக்காரர். இன்னும் பல சிறப்புகளுக்கு உரியவரான இந்த முற்றத்து முல்லைக்கு மணமில்லை என்று அன்றைய தமிழகத்து பெரும்பாலான வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர்.

சிந்திப்போமா – வாழ்க்கையில் எளிதானவற்றைச் செய்பவர் அலுப்புடன் வாழ்கிறார். அரிதானவற்றைச் செய்பவர் மனநிறைவோடு வாழ்கிறார். முடியாததைச் செய்து முடிப்பவர் வரலாற்றில் தடம் பதிக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.