2010-07-26 15:41:24

செபிப்பவர் எவரும் ஒருபொழுதும் தனியாக இல்லை - திருத்தந்தை


ஜூலை 26, 2010 செபிப்பவர் எவரும் ஒருபொழுதும் தனியாக இல்லை, ஏனெனில் செபிப்பவரின் குரல் திருச்சபையின் குரலோடு பின்னிப் பிணைந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறன்று கூறினார்.
காஸ்தெல் கண்டோல்ஃபோவிலுள்ள பாப்பிறை கோடை விடுமுறை இல்லத்திலிருந்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான, இயேசு கற்றுக் கொடுத்த வானகத்தந்தையை நோக்கிய செபத்தை மையமாக வைத்து சிந்தனைகளை வழங்கிய போது இவ்வாறு கூறினார்.
இயேசு சொல்லிக் கொடுத்த இந்தச் செபம் மனிதனின் பொருளாதார மற்றும் ஆன்மீகத் தேவைகளை எவ்வாறு ஒன்றிணைத்து வெளிப்படுத்துகின்றது என்பது குறித்து விளக்கிய திருத்தந்தை, இது ஒருவரின் சொந்தத் தேவைகளை நிறைவேற்றுமாறு கேட்பதல்ல, மாறாக ஒருவர் கடவுளுடனான நட்புறவில் தொடர்ந்து வாழ்வதற்கு உதவி கேட்பதாகும் என்று கூறினார்.
இறைவன், நம்மை எல்லாவித ஆபத்துக்களிலிருந்து விடுவித்து நம்மிடமிருந்து எல்லாத் தீமைகளையும் எடுத்துவிடுமாறு அவரிடம் எப்பொழுதும் கெஞ்ச வேண்டும் என்று புனிதை அவிலா தெரேசாள் தனது துறவு சபையின் அருட்சகோதரிகளிடம் கூறியிருப்பதைக் குறிப்பிட்டார் திருத்தந்தை.
நாம் ஒவ்வொரு தடவையும் இயேசு சொல்லிக் கொடுத்தச் செபத்தைச் செபிக்கும் பொழுது, செபிப்பவரின் குரல் திருச்சபையின் குரலோடு ஒன்றிணைந்துள்ளது, ஏனெனில் செபிப்பவர் எவரும் ஒருபொழுதும் தனியாக இல்லை என்று கூறினார் திருத்தந்தை.1989ம் ஆண்டில் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் வெளியிட்ட ஏட்டில் இச்செபம் பற்றிக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருச்சபையினால் கற்றுக் கொடுக்கப்பட்ட கிறிஸ்தவ செபத்தில் ஒவ்வொரு விசுவாசியும் உண்மை மற்றும் வளமையைத் தேடிக் கண்டடைய முயற்சிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்து ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.







All the contents on this site are copyrighted ©.