2010-07-24 15:04:19

ஹெய்ட்டி பள்ளிக்கூடத்தைச் சீரமைப்பதற்கென திருத்தந்தையின் நன்கொடையாக 2,50,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது


ஜூலை24,2010. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி நாட்டில் பள்ளிக்கூடத்தைச் சீரமைப்பதற்கென திருத்தந்தையின் நன்கொடையாக 2,50,000 டாலரை வழங்கியுள்ளது Cor Unum என்ற திருப்பீடப் பிறரன்பு நிறுவனம்.

இவ்வாரத்தில் ஹெய்ட்டி சென்ற “கோர் ஊனும்” நிறுவனத்தின் உறுப்பினர்கள், அந்நாட்டுத் தலைநகர் Port-au-Prince ல் பள்ளிக்கூடத்தைச் சீரமைப்பதற்கெனத் திருத்தந்தையின் பெயரில் இந்நன்கொடையை வழங்கினர்.

உதவி தேவைப்படும் இடங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு சிறிய தொகை திருத்தந்தையின் நன்கொடையாக வழங்கப்படுகிறது. தற்சமயம் ஹெய்ட்டிக்கு வழங்கப்பட்டுள்ள இத்தொகை சிறிய அளவேயானாலும், துன்புறும் அம்மக்களுடன் திருத்தந்தை கொண்டுள்ள ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாக இது இருக்கின்றது.

2009ம் ஆண்டில் அவசரகால நிவாரண உதவியாக மட்டும் 25 நாடுகளுக்கு 19 இலட்சம் டாலரைத் திருத்தந்தை அனுப்பியுள்ளார். மேலும், கடந்த ஆண்டில், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சித் திட்டங்களுக்கென 23 இலட்சம் டாலரையும் அவர் வழங்கியுள்ளார். திருத்தந்தையின் இந்நன்கொடைகள் திருப்பீட கோர் ஊனும் நிறுவனம் வழியாக வழங்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.