2010-07-24 15:02:08

வருகிற ஆகஸ்ட் மூன்றாந்தேதி மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் பல்லாயிரக்கணக்கானப் பீடச்சிறாரைச் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


ஜூலை24,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற ஆகஸ்ட் மூன்றாந்தேதி மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் பல்லாயிரக்கணக்கானப் பீடச்சிறாரைச் சந்திக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"Coetus Ministrantium Internationalis" என்ற சர்வதேச பீடச்சிறார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் பத்தாவது ஐரோப்பிய திருப்பயணத்தில் கலந்து கொள்ளும் பன்னிரண்டு ஐரோப்பிய நாடுகளின் பல்லாயிரக்கணக்கானப் பீடச்சிறார் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் ஆகஸ்ட் மூன்றாந்தேதி, மாலை திருப்புகழ்மாலை செபிப்பர், பின்னர் திருத்தந்தையும் அவர்களைச் சந்திப்பார்.

இச்சந்திப்பின் இறுதியில் இந்தச் சிறார் தங்கள் தங்கள் நாடுகளின் வண்ணங்களிலான கழுத்துத் துண்டுகளை மற்ற நாடுகளின் சிறாரோடு பகிந்து கொள்வர்.

ஆகஸ்ட் நான்காம் தேதி புதனன்று காலை வத்திக்கானில் நடைபெறும் திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்திலும் அச்சிறார் கலந்து கொள்வர். அச்சமயம் திருத்தந்தைக்கு வெண்ணிறக் கழுத்துத் துண்டையும் வழங்குவர்.

ஜெர்மனியிலிருந்து சுமார் 44 ஆயிரம், ஹங்கேரி, பிரான்ஸ், ரொமானியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சுமார் எட்டாயிரம் உட்பட பன்னிரண்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானப் பீடச்சிறார் வருகிற ஆகஸ்ட் 3,4 தேதிகளில் உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.