2010-07-23 15:47:19

ஜூலை 24. நாளும் ஒரு நல்லெண்ணம்


கால்கள் நடை பயிலத் துவங்கி விட்டன.

எதற்காகப் படைக்கப்பட்டன என்ற கேள்வி இன்னும் அடங்கவில்லை.

எட்டி உதைக்கவா? ஏந்தி நடக்கவா?

சாதிக்காய் போராடும் உலகில் சாதிக்கப் பிறந்த கால்கள் நடைபோட ஆரம்பித்துவிட்டன.

ஆசைகளும் ஏக்கங்களும் காலடித்தொட்டே வருகின்றன.

மரணத்தின் திசை நோக்கிப் படைக்கப்பட்டவையல்ல நம் கால்கள்.

வாழ்வின் கரை நோக்கி நீந்தப் பழக்கப்பட்டவை அவை.

வாழ்வெனும் ஓட்டப்பந்தயத்தில் கடிகார முட்களோடு நம் போட்டி தொடங்கட்டும்.

இறகுகளின் வலிமை கொண்டு சரித்திரத்தில் பாதம் பதிப்போம்.

அனுபவத்தின் பாதம் தொட்டு வணங்கி பயணம் தொடர்வோம்.

வெற்றியின் வாசல் தேடி அலையும் நம் பாதங்கள் நடந்து வந்த பாதையை மட்டுமல்ல பெரியோரின் காலடிப் பதிவுகளையும் ஊன்றிப் பார்க்கட்டும்.

நான்கு கால் கொஞ்சலுக்கும் மூன்று கால் கெஞ்சலுக்கும் இடையில் தான் எத்தனை ஆட்டங்கள்?

மனது சென்ற இடமெல்லாம் கால்களையும் இழுத்துச் செல்கிறோமே!

கால்களை வேர்களாக ஊன்ற மறுக்கும் காலமிது.

நாற்றங்கால் பயிராய் பிடுங்கி நட வேறு இடமிருந்தும் வர மறுக்கும் கால்நடை வாழ்வு இது.

கால் நடையாய் நடந்து நடந்து என்ன கண்டோம்? ஆயிரங்கால் மண்டபங்கள் தான் நிலைத்து நிற்கின்றன.

இந்த பூமியில் நம் பாதங்கள் பதியட்டும். வெற்றி நடைப் பயணம் தொடரட்டும்.








All the contents on this site are copyrighted ©.