2010-07-23 16:18:24

கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு சிலே ஆயர்கள் அரசுத் தலைவருக்கு விண்ணப்பம்


ஜூலை23,2010 சிலே நாடு சுதந்திரம் அடைந்ததன் 200வது ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அந்நாட்டில் சில கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு அரசுத் தலைவருக்கு விண்ணப்ப மனுவை அனுப்பியுள்ளார் சிலே ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Alejandro Goic.

ஆயர் Alejandro Goicன் கையெழுத்துடன் அரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்நாட்டு ஆயர்களின் இவ்விண்ணப்ப மனுவில், ஆயர்கள் பரிந்துரைக்கும் இந்த மன்னிப்பு, சமயப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்னமே, பழைய ஏற்பாட்டுக் காலத்திலே முக்கிய கொண்டாட்டங்களின் போது பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்பதும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆயர்களாகிய தாங்கள், நாட்டின் சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பாக இதைக் கேட்கவில்லையென்று கூறும் அம்மனு, சிறையில் தண்டனை அனுபவிப்பவர்கள் எல்லாருமே அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி அகுஸ்தோ பினோஷேயின் இராணுவ ஆட்சியில் இடம் பெற்ற குற்றங்களுக்கு முழுவதும் பொறுப்பானவர்கள் அல்ல என்றும் கூறுகிறது.

பினோஷே ஆட்சியின் போது குற்றம் புரிந்ததாகத் தீர்ப்பிடப்பட்டு சிறையிலுள்ளவர்களில் பலர் தங்களின் தண்டனைக் காலத்தின் பெரும் பகுதியை நிறைவேற்றிவிட்டனர் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் வேதனையை முன்னிட்டு இவ்வாறு பரிந்துரைப்பதாகவும் அம்மனு கூறுகிறது.

மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆயர்கள் கேட்கும் கைதிகளில் குழந்தைகளோடு வாழும் பெண் கைதிகள், வயதான கைதிகள், தீராத நோயாளிக் கைதிகள் போன்றோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாறும் அம்மனு கேட்டுள்ளது.

1973ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இடம் பெற்ற பினோஷேயின் இராணுவ ஆட்சியில் சுமார் மூவாயிரம் பேர் இறந்தனர்.

இதற்கிடையே, சிலே ஆயர்களின் இக்கோரிக்கையினால், பினோஷேயின் ஆட்சியில் பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் மறக்கப்படும் என்று சொல்லி அதற்குச் சில மனித உரிமைகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கி.மு.12,000 ஆண்டுவாக்கில் சிலே நாட்டில் அமெரிக்கப் பழங்குடி இனத்தவர் குடியேறியதாகச் சொல்லப்படுகிறது. இந்நாட்டில் 16ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவர் தங்கள் காலனி ஆதிக்கத்தைத் தொடங்கினர்.

1810ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி, சிலே நாடு ஸ்பெயினிடமிருந்து சுதந்திரமடைந்தது.








All the contents on this site are copyrighted ©.