2010-07-22 13:11:40

ஜூலை 23 நாளும் ஒரு நல்லெண்ணம்


1964ம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அந்த இளம் வழக்கறிஞர் குற்றவாளிக் கூண்டிலே நின்றார். வழக்கறிஞரே அன்று குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியாக நின்றார். நீதிபதியின் விசாரணை தொடங்கியது. அப்போது அந்த இளம் வழக்கறிஞர், “நான் ஒரு புதிய தென்னாப்ரிக்காவைக் கனவு காண்கிறேன். கறுப்பரும் வெள்ளையரும் ஒருசேர நின்று நடைபயின்று பணியாற்றி வாழ்ந்திட வேண்டுமென்பதே எனது அக்கறை, அதுவே எனது கனவு, இதற்காக எனது இலட்சியக் கனவை நனவாக்க எதையும் எதிர்நோக்கத் தயார்” என்று சொன்னார். தீர்ப்புச் சொல்லப்பட்டது. அவர் கைதியாக்கப்பட்டார். அவர்தான் கறுப்பின காந்தி என அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா. நெல்சன் மணடேலாவின் இலட்சியக் கனவு மெய்ப்பட்டு விட்டது. ஆம். கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

பாரதத்தின் முன்னாள் அரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களும், வல்லரசு இந்தியாவை உருவாக்க 25 வயதுக்கு கீழ் உள்ள 54 கோடி இளைஞர்களும் கனவு காண வேண்டும் என்று சொல்லி வருகிறார். மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைய வழி ஏற்படும். வாழ்வில் இலட்சியம் வேண்டும். தோல்வியைக் கண்டு துவளாமல் வெற்றி காண தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் வாழும் நாட்களை வீணடிக்க கூடாது. உள்ளத்தில் உறுதி வேண்டும். நேர்மையான எண்ணம் வேண்டும். வாழ்வில் நல்ல ஒழுக்கம் வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.

உறங்கும் உணர்வுகள் விழித்தெழட்டும், அவை உறக்கத்தைக் கலைக்கட்டும். இலட்சிய கனவுகள் பில்லியன்களாகட்டும். இலட்சியக் கனவுகள் மெய்ப்படட்டும்.








All the contents on this site are copyrighted ©.