2010-07-21 15:08:42

பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய முஸ்லீம் தலைவர் கண்டனம்


ஜூலை21,2010 தேவநிந்தனைத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டது குறித்தத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இந்திய முஸ்லீம் தலைவர் Asghar Ali Engineer.
இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டது கொடூரமானக் குற்றம் மற்றும் இத்தகைய குற்றச் செயல்கள் பாகிஸ்தானில் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன என்றுரைத்த மும்பை சமூக மற்றும் சமயச்சார்பற்ற ஆய்வு மையத் தலைவர் Engineer, தேவநிந்தனைத் தடைச் சட்டங்களைத் தான் முழுமையாய் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
தேவநிந்தனைத் தடைச்சட்டம் பற்றிக் குரானில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றுரைத்த Engineer, பாகிஸ்தானில் இந்தச் சட்டம் சிறுபான்மை கிறிஸ்தவர்க்கெதிராகத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.
பாகிஸ்தானில் தேவநிந்தனைத் தடைச்சட்டத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 35 வயது ரஷித் இம்மானுவேல், 30 வயது சஷித் மாசிக் இம்மானுவேல் ஆகிய இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் இத்திங்களன்று ஃபாய்சலாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இதேமாதிரியானக் குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கேரளாவில் முஸ்லீம்களால், கிறிஸ்தவப் பேராசிரியர் T.J.Joseph என்பவரின் கை துண்டிக்கப்பட்தையும் குறிப்பிட்டுப் பேசிய, மும்பை சமூக மற்றும் சமயச்சார்பற்ற ஆய்வு மையத் தலைவர் Engineer, இத்தகைய வன்முறைகளைத் எத்தகைய கடும் சொற்களால் எதிர்க்க முடியுமோ அத்தகைய வார்த்தைகளால் தான் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.