2010-07-20 15:46:35

ஐரோப்பாவில் சமூக சமத்துவமின்மைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது - திருப்பீடம்


ஜூலை 20, 2010. ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற பிரச்னைகள் உட்பட சமூக சமத்துவமின்மைகள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வளர்ந்து வருவதாகத் திருப்பீடம் ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் எச்சரித்தது.

ஐரோப்பிய அவை, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள், 24 ஆயர்கள், யூதமதத்தின் முக்கிய ராபிகள், முஸ்லீம்மதக் குருக்கள், இந்து மற்றும் சீக்கிய சமூகங்களின் பிரதிநிதிகள் இணைந்து “ஏழ்மை மற்றும் சமூகப் புறக்கணிப்பு” குறித்து பெல்ஜிய நாட்டு பிரசல்ஸ்ஸில் நடத்திய ஒருநாள் கூட்டத்தில் உரையாற்றிய நீதி மற்றும் அமைதிக்கானத் திருப்பீட அவையின் நேரடிப் பொதுச் செயலர் Flaminia Giovanelli இவ்வாறு தெரிவித்தார்.

ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது கவலை தருவதாக இருக்கும் அதேவேளை, பணக்காரருக்கும் ஏழைகளுக்குமிடையேயான வேறுபாடுகளும் அதிகரித்து வருகிறது மற்றும் இது துர்மாதிரிகையாகவும் இருக்கின்றது என்று Giovanelli கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் எட்டு கோடியே ஐம்பது இலட்சம் மக்கள் அதாவது 17 விழுக்காட்டு மக்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் கடும் வறுமையில் வாழ்கின்றனர், இது மதிப்பீடுகளின் அமைப்புமுறை பிரச்னையாகத் தென்படுகின்றன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

ஐரோப்பாவில் ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது, மறுபுறம் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டிய ஜோவனெல்லி, எட்டு விழுக்காட்டு ஐரோப்பிய தொழிலாளர்களுக்குப் போதுமான ஊதியம் கிடைக்கவில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.