2010-07-20 15:45:25

இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களைக் கொலை செய்தவர்கள் நீதி விசாரணையின்முன் நிறுத்தப்படுமாறு ஃபாய்சாலபாத் ஆயர் வேண்டுகோள்


ஜூலை 20, 2010. பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களைக் கொலை செய்தவர்கள் நீதி விசாரணையின்முன் நிறுத்தப்படுமாறு ஃபாய்சாலபாத் ஆயர் ஜோசப் கூட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபாய்சாலபாத்தில் இத்திங்களன்று இரண்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையே உருவாகியுள்ள பதட்ட நிலைகளில் கிறிஸ்தவ ஆலயம் சூறையாடப்பட்டது மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. மேலும், உள்ளூர் மசூதிகள் ஒலிபெருக்கிகள் மூலம் இத்தகைய வன்முறைக்கு ஊக்கம் அளிக்கும் அறிவிப்புகளைக் கூறிவந்தன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

Rashid Emmanuel, Sajid Masih Emmanuel ஆகிய இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களும் இறைவாக்கினர் முகமதுக்கு எதிரான வார்த்தைகளை எழுதினார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு இம்மாதம் இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டனர். எனினும், அந்த எழுத்துக்கள் இவர்களுடையது அல்ல என்று நிரூபணமானதால் இவர்கள் இத்திங்களன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நிரபராதிகள் என விடுவிக்கப்படவிருந்தனர். இவ்விருவரது கைகளும் சேர்த்து விலங்கு மாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது நீதிமன்றத்துக்கு வெளியே இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சகோதரர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதற்கொண்டு இவர்கள் கொல்லப்பட வேண்டுமென்று ஃபாய்சலாபாத் முஸ்லீம் மதக் குருக்கள் அம்மதத்தின் விசுவாசிகளைத் தூண்டி வந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இச்சகோதரர்களின் அடக்கச் சடங்குத் திருப்பலி அந்நகர் புனிதர்கள் பேதுரு பவுல் பேராலயத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்றது.

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள்விடுத்த ஆயர் கூட்ஸ், உண்மையான குற்றவாளிகள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படுமாறும் தேவநிந்தனைத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்னும், இக்கொலை குறி்தது கருத்து தெரிவித்த தொமினிக்கன் சபை அருள்தந்தை பாஸ்கால் பவுலுஸ், இந்தச் சகோதரர்களுக்கு அதிகப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு தலத்திருச்சபை வற்புறுத்தி வந்தது என்றும் இத்தகைய வன்முறைச் செயலைத் தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

இவ்வன்முறையைத் தொடர்ந்து, காரித்தாஸ் தலைமையகம் உட்பட திருச்சபை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பல கிறிஸ்தவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பாக அறுபது முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

மேலும், கத்தோலிக்கர் இசுலாமியக் கோட்பாடுகள் குறித்து விவாதிக்கவும் அம்மதத்தைப் பற்றிப் பேசவும் வேண்டாமெனக் கேட்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள், இசுலாத்தை மதித்து சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.