2010-07-19 15:20:36

விடுமுறை நாட்களில் இறைவனை அதிகம் நினைப்பதற்குத் திருத்தந்தை அழைப்பு


ஜூலை19, 2010. கோடை விடுமுறையும் வேலையிலிருந்து ஓய்வு பெறும் காலமும் நாம் கடவுளிடம் நெருக்கமாகச் செல்வதில் வளருவதற்கும் அவரது திருவார்த்தையைத் தியானிப்பதற்கும் உதவுவதாய் இருக்க வேண்டுமென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறை கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானப் பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, கோடை விடுமுறையையும் வேலையிலிருந்து ஓய்வு பெறும் காலத்தையும் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

நாம் ஏற்கனவே, குறிப்பாக இப்பூமிப்பந்தின் வடபகுதியில் கோடை வெப்பத்தை அனுபவித்து வருகிறோம், இந்தக் கோடையில்தான் பள்ளிகள் மூடப்படுகின்றன மற்றும் பெரும்பாலான விடுமுறைகள் எடுக்கப்படுகின்றன, எனவே இது நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதற்கு, அதாவது இறைவார்த்தையை உற்றுக் கேட்பதற்கு முதலிடம் கொடுப்பதற்கு ஏற்ற காலம் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

மார்த்தா, மரியா வீட்டிற்கு இயேசு சென்றது குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றி விளக்கிய திருத்தந்தை, உண்மையாகவே அவசியமான ஒன்றை, அதாவது நம் ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிமடுப்பதை கிறிஸ்து மார்த்தாவுக்கு நினைவுபடுத்தினார் என்றார்.

எல்லாம் நம்மைக் கடந்து செல்லும், எல்லாம் நம்மிடமிருந்து எடுக்கப்படும், ஆனால் இறைவனின் வார்த்தை மட்டும் நிலையானது மற்றும் இது நமது அன்றாடச் செயல்களுக்கு அர்த்தம் கொடுக்கின்றது என்று விளக்கினார் திருத்தந்தை.

அன்பின்றி இருந்தால், நமது மிக முக்கியமான செயல்கள்கூட அவற்றின் விழுமியங்களை இழக்கும் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வராது என்றுரைத்த திருத்தந்தை, ஆழமான அர்த்தமின்றி நாம் செய்யும் ஒவ்வொன்றும் வளமையற்றதாயும் ஒழுங்கற்றும் இருக்கும் என்றும் பலநாடுகளின் திருப்பயணிகளிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.