2010-07-19 15:40:27

திருப்பீடத்தின் புதிய விதிகள் முன்னோக்கிய பாதையில் முக்கிய மைல் கல் என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்.


ஜூலை 19, 2010. கடந்த வியாழனன்று திருப்பீடம் வெளியிட்ட பெருங்குற்றங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய விதிமுறைகள், திருச்சபையின் மிகச்சிறந்த பலன் தரும் பதில் மொழியாகும் என்றார் திருப்பீடப்பேச்சாளர் குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.

ஒக்டாவா தியேஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன் கருத்துக்களை வெளியிட்ட திருப்பீடப்பேச்சாளர், சிறார்கள் பாலியல் வகையில் தவறாக நடத்தப்படுவது குறித்த திருச்சபையின் புதியச் சட்டங்களும் விதிமுறைகளும், வழக்கை விரைவானதாகவும் நல்ல பலன் தர வல்லதாகவும் மாற்றுவதோடு, வழக்காடு மன்றத்தில் பொதுநிலையினரின் பங்கேற்பையும் புகுத்துவதாக உள்ளது என்றார்.

பெருங்குற்றங்களைப் புரிந்தவர்களுக்கான தண்டனை குறித்த இப்புதிய விதிகளை வெளியிட்டுள்ள திருப்பீடம், குருக்களுக்கானப் பயிற்சி, திருச்சபைப் பணியாளர்களுக்கான கல்வி, தகவல் பெறுதல், குற்றங்கள் நிகழுமுன்னே தடுத்தல், பாதிக்கப்பட்டோருடன் உரையாடல் மற்றும் அவர்களுக்கான தனிப்பட்ட அக்கறை ஆகியவைகளிலும் அதிகக் கவனம் செலுத்த உள்ளது என்றார் இயேசு சபை குரு லொம்பார்தி.

பெருங்குற்றங்கள், குறிப்பாக குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகள் குறித்தவைகளில் ஒவ்வொரு மறைமாவட்டமும் புதிய விதிகளைக் கைக்கொள்ள உதவும் வண்ணம் திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் உதவ உள்ளதாகவும் தெரிவித்தார் திருப்பீடப்பேச்சாளர்.

திருப்பீடத்தின் புதிய விதிகள் முக்கியம் நிறைந்தவை எனினும், தூய சாட்சியத்திற்கான நம் அர்ப்பணமே நீடித்து நிலைக்கக்கூடடியது என மேலும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.