2010-07-19 14:48:14

"தவறுகள் திருத்துகின்றன"


ஜூலை19,2010 மெக்சிகோ நாட்டுக் கதை ஒன்றைச் சொல்லி இன்றைய அலசலைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றோம். பல மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முப்பதாவது மாடியில் ஒரு வங்கி மேலாளர் வாழ்ந்து வந்தார். அவர் தனது அன்றாடச் செலவுகளுக்கெனப் பணத்தைத், தாளாகவோ சில்லரையாகவோ வைத்திருக்க மாட்டார். மாறாக விதவிதமான வங்கி கிரடிட் அட்டைகளைப் பயன்படுத்துவார். மனிதர் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கறாரானவர். யாரோடும் அதிகம் பேசமாட்டார். எந்த பொழுது போக்கிலும் நாட்டம் இல்லாதவர். வேலை முடிந்ததும் நேராக வீடு திரும்பும் அவர், கதவை உள்பக்கம் தாளிட்டு அங்கேயே முடங்கி விடுவார். ஒருநாள் காலையில் அவர் வேலைக்குப் புறப்பட்ட போது அவரது வீட்டுக் கதவைத் திறக்க முடியாமல் சாவி உள்ளே சிக்கிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் முடியவில்லை. சாவியும் பாதி உடைந்து விட்டது. உடனே பூட்டுத் திறக்கும் தொழிலாளியைத் தொலைபேசி மூலம் அழைத்தார். அவனும் வந்தான். எனக்கு ஐம்பது டாலர் கூலி தந்தால்தான் இவ்வேலையைச் செய்வேன் என்றான் தொழிலாளி. வங்கி மேலாளரும் ஒத்துக் கொண்டார். நீ முதலில் கதவைத் திற. அப்புறம் தருகிறேன் என்றார். அதற்கு அவன், இல்லை இல்லை, எங்கள் சங்கத்தின் ஒழுங்குப்படி முதலில் கூலியைப் பெற்றுக் கொண்டுதான் வேலை செய்ய வேண்டும், அதனால் கதவின் அடியிலிருந்து பணத்தை அனுப்பும் என்றான். அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை, பிறகு தருகிறேன் என்றதும், அவனும் கூலியைப் பெறாமல் நான் எனது சங்க விதிகளை மீறி வேலை செய்ய முடியாது என்றான். உடனே அவர் அவனைக் கடும் சொற்களால் திட்டித் தீர்த்தார். உடனே அவனும், நீர் என்னைக் கடும் வார்த்தைகளால் அவமதித்து விட்டீர், இனிமேல் பூட்டுத் திறப்பவன் எவனும் வேலைக்கு வரமாட்டான், நான் வருகிறேன், நீர் உள்ளேயே இரும் என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டான்.

இந்த இக்கட்டான சூழலில் செய்வதறியாது திகைத்தார் அந்த வங்கி மேலாளர். தனது வங்கி உதவியாளரைத் தொலைபேசியில் கூப்பிட்டு உடனடியாக வந்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டார். அந்த உதவியாளரோ, ஐயா, அன்றொருநாள் நான் இதுபோன்றதொரு பிரச்னையில் கஷ்டப்பட்ட போது அரைநாள் விடுப்பு கேட்டேன். நீர் எனக்குத் தரவில்லை. எனவே இப்போது என்னால் உமக்கு உதவ முடியாது. அதோடு, நீர் வேலைக்கு இன்று வரவில்லை, இதற்கான காரணமும் தெரியவில்லை என்று மேலிடத்துக்குப் புகார் எழுதுகிறேன், இனிமேல் நீர் இந்தத் தொலைபேசியிலும் பேச முடியாது என்று அந்தத் தொலைபேசி தடத்தையும் துண்டித்து விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் தனது காதலியைத் தொலைபேசியில் அழைத்து விபரத்தைச் சொன்னார். அவளும் அவரிடம், நான் எத்தனையோ தடவைகள் உனக்காகக் கடற்கரையில் காத்திருந்தேன். நீ வரவே இல்லை, ஆதலால் இன்று ஒருநாள் தனியே கிடந்து பாரும், அந்த வலி புரியும் என்று சொல்லி அவளும் தொலைபேசி தடத்தைத் துண்டித்து விட்டாள். பின்னர் அந்த வங்கி மேலாளர் தனது செல்லிட தொலைபேசியில் மற்றொருவரை அழைக்க முயற்சித்தார். ஆனால் அதிலோ போதுமான பணம் இல்லை. பின்னர் ஒரு தாளில் தனது பிரச்னையை எழுதி ஜன்னல் வழியே கீழே போட்டார். அப்பக்கம் சென்றவர்கள் யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. அதைப் பார்த்த ஓர் ஆளும் கவனமாக அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

இப்படியாக ஒருநாள் முழுவதும் பூட்டிய வீட்டிற்குள்ளே இருந்தார் வங்கி மேலாளர். பயமும் பதட்டமும் கவலையும் அவரைப் பற்றிக் கொண்டன. இரவெல்லாம் தூங்கவும் முடியவில்லை. மறுநாள் காலை ஜன்னலைத் திறந்து பார்த்தார். அழகான காலைப் பொழுது. பறவைகளின் சப்தம். இரம்மியமான சூரிய ஒளி, இதமான காற்று. இவற்றையெல்லாம் இதற்கு முன்னர் இவர் ஒருபொழுதும் அனுபவித்ததேயில்லை. எல்லாமே புதிதாகத் தெரிந்தன. தான் இத்தனை காலமும் எல்லாருடனும் நட்புடனும் சமாதானத்துடனும் வாழாதது பற்றியும், சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே தனது வீட்டைப் பயன்படுத்தியது குறித்தும் வருந்துகிறார். மறுநாள் எல்லாரது உதவியும் கிடைத்தது. தான் சந்தித்த அத்தனை பேருக்கும் புன்னகையோடு வணக்கம் சொன்னார். வங்கியில் அவரது நடவடிக்கைகளும் மாறத் தொடங்கின. தன்னைச் சுற்றிய உலகம் அசிங்கமாகத் தோன்றியதன் காரணத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார். ஆம். இந்த வங்கி மேலாளரின் தவறுகள் அவரைத் திருத்திவிட்டன. உண்மையில் “தவறுகள் திருத்துகின்றன”.

இன்று பூமியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தால் காலச் சுழற்சியில் வித்தியாசம் தெரிகிறது. பருவமழை காலம் கடந்து பெய்கிறது, அதுவும் போதுமானதாக இல்லை. பல இடங்களில் மலர்கள் ஊமைகளாகவும், இதழ்கள் சிரிக்க மறந்தும் காணப்படுகின்றன. அத்துடன், இவை பருவம் மாறியும் பூக்கின்றன. இந்தத் தடுமாற்றங்களுக்குக் காரணமான மனிதன் தனது தவறுகள் கண்டு திருந்துகிறானா? அல்லது மனிதனின் இந்த தவறுகள் அவனைத் திருத்துகின்றனவா? இப்படி எனது நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவர் திருப்பிச் சொன்னார் – அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தவறுகள் அவர்களைத் திருத்துவது கடினம் என்று. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பற்றி கடந்த வாரத்தில் வெளியாகியுள்ள ஊழல் புகார் செய்தியையும் அந்த நண்பர் சுட்டிக் காட்டினார். நிதிஷ்குமார், 'சாதாரண ரிக்ஷாவில் உட்கார்ந்து பயணம் செய்பவர், நினைத்த இடத்தில் ரிக்ஷாவை நிறுத்தி தேனீர் சாப்பிடுகிறவர், மக்களின் கஷ்டங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறேன் என்று குடிசைகளில் தங்குகிறவர்...' இவ்வாறெல்லாம் பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் புகழப்பட்டவர். 2009-ம் ஆண்டின் சிறந்த அரசியல்வாதியாக, என்.டி.டி.வி-யின் நடுவர் குழு, இவரையே தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியது. இத்தகைய அரசியல்வாதி மீது தற்போது 11 ஆயிரத்து 412 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் புகார் கறை விழுந்திருக்கிறதே! இந்தப் புகார்கள் அவரை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்புமா என்று கேட்டார் அந்த நண்பர்.

தவறுகளினால் மனிதன் திருந்த வேண்டும், தவறுகளிலிருந்து அவன் பாடம் கற்றுக் கொண்டு புதிய பாதையில் வாழ்க்கையைச் செலுத்த வேண்டும் என்பதுதானே எல்லாரின் ஆவலும். ஆனால் ஒருவர் தன்னிடம் தவறு இருப்பதையே ஒத்துக்கொள்ளாத போது அந்தத் தவற்றால் அவர் எப்படி திருந்துவார்? அல்லது மற்றவர் அவரது தவற்றைச் சுட்டிக்காட்டும் பொழுது அதற்கும் நியாயம் சொல்லித் தப்பித்துவிட்டால் அவர் என்றுதான் நல்லவராக வாழ்வார்?

“தவறுகள் திருத்துகின்றன”. தவறுகளால் பலர் திருந்துகின்றனர் என்பது நாம் கண்கூடாகக் காணும் அனுபவ உண்மை. அதேநேரம், பலர் தங்களது இளமைக்கால வாழ்க்கையில் தவறவிட்ட வாய்ப்புக்களைப் கவலைகளாகச் சுமந்து செல்கிறார்கள். அந்தப் பழைய நினைவுகள் கிளறப்படும்போதெல்லாம் சோகத்தில் மூழ்கி தூக்கமிழந்து தவிப்பவர்களும் உள்ளனர். “ஐயோ, என்னை என் அப்பா நல்லாப் படிடா படிடா என்று எத்தனை முறை வற்புறுத்தினார், எத்தனைமுறை அழுது கெஞ்சினார். ஆனால் நானோ சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து எனது இளமையை மதுவிலும் ஊர் சுற்றுவதிலும் வீணடித்தேன். அதனால் பள்ளிப்படிப்பைக்கூட ஒழுங்காக முடிக்கவில்லை, என் உடன் பிறப்புக்கள் நன்றாகப் படித்து நல்ல வேலையிலும் இருக்கின்றார்கள்” என்று வயது வந்தபின்னர் மனம் வருந்தும் ஆட்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இப்படி இறந்த காலத்தில் தவறவிட்ட வாய்ப்புக்களை, நிகழ்காலத்தில் நினைத்துக் கலங்கி அதனால் நிகழ்காலத்தைத் தொலைப்பவர்கள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். இறந்த காலத்தில் செய்த தவறுகளை நிகழ்காலத்தில் நினைத்து வருந்துவதால் அது நிகழ்காலத்தின் செயற்பாட்டைப் பாதிக்கும். அதனால் எதிர்காலமும் பாழாய்ப்போகும். வாழ்க்கையில் மூன்று காலமும் இப்படி இருந்தால் அந்த வாழ்க்கையால் யாருக்குப் பயன்?

இதற்கு மாறாக இறந்த காலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு நிகழ்காலத்தை வசந்தமாக்க வேண்டாமா! கடந்து போனவை போனவைதான். அந்த நொறுங்கிப்போன கனவுகளிலிருந்து வெளிவர வேண்டும். அந்தச் சோகங்களைத் தூக்கியெறிய வேண்டும். இறந்தகாலத் தவறுகள் வெறும் கவலைகளாகவே தொடர்ந்து வந்தால் அவை இன்றைய வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும். அதேநேரம் அவை அனுபவங்களானால் அது இன்றைய வாழ்க்கைக்கு வெற்றிப்படியாகத் திகழும். தடைக்கற்களா? படிக்கற்களா? எதைத் தேர்ந்தெடுத்து வாழ்வது என்பது ஒவ்வொருவரின் கையில்தான் உள்ளது. ஒருவருக்கு தன்னைப் பற்றிய தெளிவு இருந்தாலே அவர் வெற்றி பெறுவது உறுதி.

ஒரு கஞ்சனான தந்தை தனது குடும்பத்திற்கு வாழைப்பழத்தைத் தாரோடு வாங்கி வந்தார். அதில் பழங்கள் பல நிலைகளில் இருந்தன. சில அழுகும் நிலையில் இருந்தன. சில அளவுக்கு அதிகமாக கனிந்து இருந்தன. சில செங்காய்களாக இருந்தன. இந்த அழுகும் நிலையிலிருந்தப் பழங்களை அந்தக் குடும்பம் முந்திய நாளே சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவற்றைத் தூக்கியெறிய மனமில்லாமல் அவர்கள் இன்று சாப்பிட்டார்கள். முந்தைய நாள் சாப்பிட்டிருக்க வேண்டிய பழங்களை அதற்கு அடுத்த நாளிலே சாப்பிட்டார்கள். இவ்வாறு அக்குடும்பத்தினர் தினமும் அழுகிய பழங்களையே சாப்பிட்டார்கள். இவ்வாறுதான் நம்மில் பலர் சுவையான இன்றைய வாழ்வு கண்ணுக்கு முன்பாக இருக்கும் போதே அழுகிப்போன நேற்றைய வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறோம். அதனால் இன்றைய வாழ்வு நாற்றமடிக்கிறது, புளிக்கிறது. அவ்வாறு அழுகிய நேற்றைய வாழ்க்கை வந்து புளிப்பேற்றும் பொழுது, நேயர்களே உங்களையே ஒருமுறைத் தட்டிக் கேளுங்கள். ஏன் நான் இன்னும் நேற்றைய அழுகிய பழத்தையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கேளுங்கள். இறந்தகாலத் தவறுகள் உங்களைத் திருத்த வேண்டும்.

ஆனால் ஒன்று. எதிரிகள் எங்கும் இருக்கலாம் எச்சரிக்கை.. புகழ் பாடுபவனைக் கவனி. பின்னால் புறம் பேசக்கூடும். உனக்கு மேடை கட்டுவதாகச் சொல்பவன் உண்மையில் பாடை கட்டிக் கொண்டிருக்கலாம். சில புன்னகைகள் புதைகுழிகளை ஒளித்து வைத்திருக்கலாம். முகத்தில் வெகுளித்தனமும் அகத்தில் சகுனித்தனமும் கொண்டவர்கள் அதிகமுண்டு. எட்டப்பர்களும் யூதாஸ் இஸ்காரியோத்துகளும் எட்டி இருப்பதில்லை கிட்டேயேதான் இருப்பார்கள். தூரத்தில் இருக்கும் எதிரியின் முகத்தை விட அருகில் இருக்கும் முகமூடிகள் ஆபத்தானவை.








All the contents on this site are copyrighted ©.