2010-07-17 16:43:12

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
இரு நாட்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து இங்கு உரோம் வந்திருந்த ஒரு குருவைச் சந்தித்தேன். நான் தமிழ் நாட்டிலிருந்து வந்தவன் என்பதை அவரிடம் சொன்னபோது, அவர் முகத்தில் பளீரென ஒரு புன்னகை. அவர் சென்ற ஆண்டு இந்தியாவுக்கு, தமிழ் நாட்டுக்குச் சென்று வந்ததாகவும், அங்கு சென்ற இடத்திலெல்லாம் மக்களும், இயேசு சபையாரும் அவரை வரவேற்ற விதம் அவரால் மறக்க முடியாத அனுபவம் என்றும் சொன்னார்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்று நம் விருந்தோம்பல் பண்பைப் பற்றி அடிக்கடி நாம் தலையை நிமிர்த்தி, நெஞ்சுயர்த்தி பெருமைப்படுகிறோம். பொதுவாகவே, இந்தியாவுக்கு, சிறப்பாக, தமிழகத்திற்கு வருகை தரும் பலருக்கும் மனதில் ஆழமாய்ப் பதியும் ஓர் அனுபவம், நாம் அவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கு. அதுவும் ஐரோப்பியர், அமெரிக்கர் இவர்களுக்கு இது முற்றிலும் புதிதான ஏன்?... புதிரான அனுபவமாக இருக்கும். அக்கரைக்கும், இக்கரைக்கும் அப்படி ஒரு வித்தியாசம்.
இந்த ஞாயிறன்று, தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ள சம்பவமும், நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள சம்பவமும் விருந்தோம்பலைப் பற்றி சிந்திக்க நமக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. (தொடக்க நூல் 18: 1-10); (லூக்கா 10: 38-42) தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ள சம்பவத்தைப் பற்றி மட்டும் இன்று சிந்திப்போம்.

கோடை வெயில் சுட்டெரித்துச் சென்றிருக்கலாம். அல்லது இன்னும் சுட்டெரித்துக் கொண்டிருக்கலாம். இந்த நேரத்தில் இன்றைய முதல் வாசகம் வந்திருப்பது பொருத்தமாய்த் தெரிகிறது. "பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில்"... என்று இந்த வாசகத்தின் முதல் வரிகள் சொல்கின்றன. வெப்பம் மிகுதியாகும் போது, மனமும், உடலும் சோர்ந்துவிடும். ஒருவேளை, ஆபிரகாம், அப்படி ஒரு சோர்வுடன் தன் கூடார வாயிலில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் மூன்று பேர், அவர் முன் நின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத மூவர். வழி தவறி வந்திருக்கலாம், வழி கேட்க வந்திருக்கலாம். இப்படி நேரம் காலம் தெரியாமல் வருபவர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதே அபூர்வம். “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று சீக்கிரம் அவர்களை அனுப்பி வைப்பதுதான் வழக்கம். அதற்குப் பதில், ஆபிரகாம் செய்தது வியப்பான செயல். அங்கு நடந்ததைத் தொடக்க நூலிலிருந்து கேட்போம்:
தொடக்க நூல் 18 : 1-5
பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, என் தலைவரே... நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்...என்றார். 
ஆபிரகாம் காலத்துக் கதை இது. நம் காலத்து கதை வேறு. தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையில் மிகப் புகழ்பெற்ற ஒருவர் நடித்த ஒரு காட்சி இது. அவர் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருவார். அவரது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி, யாரோ ஒருவர் அவரது பால்ய நண்பர் என்று தன்னையே அறிமுகம் செய்துகொண்டு, அவரை அழைத்துச் சென்று, ஒரு அறையில் தங்க வைத்து, அவர் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தாலும், வலுக்கட்டாயமாக, மது, உணவு என்று கொடுத்து அவரைத் தூங்க வைப்பார். மறுநாள் காலையில் அவர் கண் விழிக்கும் போது, நடுத்தெருவில் படுத்திருப்பார். அவரது உடைமைகள், அவர் படுத்திருந்த கட்டில்... ஏன் அந்த அறை கூட காணாமல் போயிருக்கும். இப்படி அந்தக் காட்சி அமைந்திருந்தது. முன் பின் தெரியாதவர்களை நம்பினால் இப்படித்தான் நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும் என்பது இன்று சொல்லப்படும் கதை.
ஆபிரகாம் வாழ்ந்த காலத்தையும், நாம் வாழும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும், அன்று, அங்கு நடந்தது இன்றைய நம் சூழலுக்குத் தேவைப்படும் ஒரு சில பாடங்களையாவது சொல்லித் தரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. மறுக்கக் கூடாது. முதலில்... முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் வரவழைத்து, விருந்து கொடுப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதே பெரும் ஆபத்து. அதற்கு மேல் அவர்களுக்கு விருந்தா? பெரு நகரங்களில் வாழ்பவர்களுக்கு வீட்டின் அழைப்பு மணி அடித்தாலே, முதலில் மனதில் ஐயமும், பயமும் கலந்த எண்ணங்களே அதிகம் எழும். கதவைத் திறப்பதற்கு முன், ஒரு துளைவழியே வெளியில் இருப்பவரைப் பார்ப்போம். கொஞ்சம் அறிமுகமானவர் போல், அல்லது, பார்க்கக் கொஞ்சம் அப்பாவி போல் தெரிந்தால், சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவை, அந்த சங்கிலி அனுமதிக்கும் அளவுக்குத் திறப்போம். வெளியில் இருப்பவர் வீட்டுக்குள் வரலாமா வேண்டாமா என்ற தீர்மானத்தை அந்தச் சிறு இடைவெளியில் எடுப்போம். இப்படி ஒருவரை வீட்டுக்குள் அனுமதிப்பதற்கே இத்தனை தயக்கம் இருக்கும் நம் சூழ்நிலையில், விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறி வருவது உண்மையிலேயே பெரும் இழப்புதான்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு விருந்து படைத்த ஆபிரகாம் கதைக்கு மீண்டும் வருவோம். வழியோடு சென்றவர்களை, வலியச் சென்று அழைத்து வந்து விருந்து படைக்கிறார் ஆபிரகாம். அதுவும், வீட்டில் எதுவும் தயாராக இல்லாமல் இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு விருந்து. விருந்தினர்கள் வீட்டுக்கு வந்த பிறகுதான் ஏற்பாடுகளே நடக்கின்றன. ஓர் எளிய, நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஒரு காட்சி நம் கண் முன் விரிகிறது.
தனக்கோ, தன் குடும்பத்திற்கோ நல்ல உணவு இல்லாதபோதும், விருந்தினர் என்று வரும்போது, பிரமாதமாக விருந்து கொடுப்பவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். தாங்கள் வசதி படைத்தவர்கள் என்பதைப் பறைசாற்றச் செய்யப்படும் முயற்சி அல்ல இது. தங்கள் அன்பை, பாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதே இந்த முயற்சி. நம் வீடுகளில் அடிக்கடி இப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு. எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து விடும் விருந்தினருக்குத் தன் வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டுக்கு அனுப்பி, அல்லது வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி ஒரு பழ ரசமோ, காப்பியோ வாங்கி வந்து கொடுக்கும் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம். அல்லது, எத்தனை முறை இப்படி நாம் நடந்து கொண்டிருக்கிறோம்?

நான் குருவான பிறகு, எத்தனையோ இல்லங்களுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். வசதி படைத்தவர்கள், அல்லது ஏழ்மையானவர்கள் வீடுகளில் சாப்பிடும் போது, அந்த உணவுக்குப் பின்னணியில் இருக்கும் அவர்களது தியாகத்தை நினைத்து கண் கலங்கியது உண்டு. விருந்தோம்பலுக்கு இலக்கணம் இந்தக் குடும்பங்கள். என்னிடம் இருந்து ஒன்றும் எதிர்பார்க்காமல், நான் ஒரு குரு என்ற அந்த தகுதிக்காக வழங்கப்படும் மரியாதை அது.

இப்படி அன்பின் அடிப்படையில், அன்பைப் பறைசாற்றும் விருந்துகளைப் பற்றிப் பேசும் போது, தன்னிடம் உள்ள செல்வத்தைப் பறை சாற்ற, அதை ஏறக்குறைய ஓர் உலக அதிசயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பல செல்வந்தர்களின் விருந்துகளையும் இங்கு சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. உலகத்திலேயே இதுவரை நடந்த திருமணங்களில் மிக அதிகச் செலவுடன் நடத்தப்பட்ட திருமணங்கள் என்ற பட்டியலை இணையதளத்தில் தேடித் பாருங்கள். வேதனையான ஒரு ஆச்சரியம் அங்கு உங்களுக்குக் காத்திருக்கும்.
2004ம் ஆண்டு உலகின் மிகப் பெரும்... மிக, மிக, மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் தன் மகளுக்கு நடத்திய திருமண விருந்து உலகச் சாதனை என்று பேசக்கூடிய அளவுக்கு செலவு செய்யப்பட்ட ஒரு விருந்து. அந்த விருந்துக்கு ஆன செலவு 60 முதல் 70 மில்லியன் டாலர், அதாவது ஏறத்தாழ 270 முதல் 300 கோடி ரூபாய். 1000 விருந்தினருக்கு ஆன அந்தச் செலவில் 30 கோடி ஏழை இந்தியர்கள் ஒரு நாள் முழவதும் வயிறார சாப்பிட்டிருக்கலாம். அந்த விருந்தில் வீணாக்கப்பட்ட உணவை மட்டும் கொண்டு கட்டாயம் 10 கோடி ஏழைகள் வயிற்றைக் கழுவியிருக்கலாம். ஏன் இந்த விருந்தையும் இந்தியாவையும் முடிச்சு போடுகிறேன் என்று குழப்பமா? இந்த விருந்தைக் கொடுத்த செல்வந்தர் ஓர் இந்தியர். இதற்கு மேல் சொல்ல வேண்டுமா?
பொறாமையில் பொருமுகிறேன். உண்மைதான். ஆனால், இப்படியும் விருந்துகள் இந்தியர்களால் நடத்தப்படுவது வேதனை என்பதையாவதுச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

விருந்தோம்பல் என்ற வார்த்தையைக் கேட்டதும், கட்டாயம் திருவள்ளுவரும், திருக்குறளும் நினைவுக்கு வந்திருக்கும். பத்துக் குறள்களில் திருவள்ளுவர் விருந்தோம்பலின் மிக உயர்ந்த பண்புகளைத் தெளிவாகக் கூறுகிறார். ஆபிரகாம் கதை எப்படி நடைமுறைக்கு ஒவ்வாத, கற்பனையாய், கனவாய்த் தெரிகிறதோ, அதேபோல், திருவள்ளுவரின் கூற்றுகளும் எட்ட முடியாத உயரத்தில் உள்ள உபதேசங்களாய்த் தெரியலாம். எட்ட முடியாத தூரத்தில் இருப்பதால் இவைகளை புளிப்பு என்று ஒதுக்காமல், வாழ்வில் ஓரளவாகிலும் கடைபிடித்தால்,... இந்த உலகம் விண்ணகமாவது உறுதி.
வள்ளுவர் கூறிய அந்த மேலான எண்ணங்களில் மூன்றை மட்டும் நம் சிந்தனைகளின் நிறைவாய், இன்று, இங்கு நினைவுக்குக் கொண்டு வருவோம்.
உலகத்தில் வாழ்வதன் முக்கிய நோக்கமே, விருந்தோம்பல் என்கிறார் வள்ளுவர்:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
சாவைத் தடுக்கும் மருந்தான அமிர்தமே நமக்குக் கிடைத்தாலும், அவைகளையும் விருந்தினரோடு பகிர்வதே அழகு என்கிறார் வள்ளுவர்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும்
வேண்டற்பாற் றன்று.
நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்கொண்டு வாழ்பவர் விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. 
வானவரின் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமைக் குறித்து புனித பவுல் அடியார் கூறும் வார்த்தைகள் இவை.
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2
சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. வந்தாரை வாழ வைக்கும் நம் தமிழ் பண்பை, நம் இந்தியப் பண்பின் ஆணி வேர்களில் ஒன்றான விருந்தோம்பலை மீண்டும் உயிர் பெறச் செய்வோம். அறியாமலேயே நாம் விருந்து படைப்போர் மத்தியில் வான தூதர்களும் இருக்கலாம். வான தூதர்கள் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பு பெறுவோம்.







All the contents on this site are copyrighted ©.