2010-07-16 16:18:48

ஜூலை 17. நாளும் ஒரு நல்லெண்ணம்


“சத்யமேவ ஜயதே” “வாய்மையே வெல்லும்”

எது வெல்லும் என்பதல்ல. எது எதை வெல்லும் என்பதுதான் குழப்பம்.

வாய்மை வெல்லுமா? வாய் மெய்யை வெல்லுமா?

மெய்தான் மெய்யை வீழ்த்துமா?

இந்த உடலுக்காய், வாழ்வுக்காய் பொய்யுரைப்போர் அதைத்தானேச் செய்கிறார்கள்!

வாயினால் பேசிப் பேசியே வானம் வரை உயர்ந்தவர்கள் மெய்யதன் உயரத்தைத்தான் அறிவார்களா?

வாய்மை என்றால் வாக்கும் சத்யமும் கலந்தது.

எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாகும் நிலையே முழுமை.

எண்ணமாய் உதித்ததை வார்த்தையாய் வார்த்தெடுக்கும் இயந்திரமே வாய்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இழிநிலை கூட வாயைச் சார்ந்தது அல்ல. அது மனதின் கட்டளை. வாய் என்பது வெறும் கருவியே.

சிந்தனைவாதிகளிடம் விளக்கம் கேட்டால், "உள்ளத்தே உள்ளதே உண்மை என்றும், வாய் வழியே வரும்போது வாய்மை என்றும், மெய் எனும் உடல் துணையால் செயல் வடிவம் பெறும்போது 'மெய்' " என்றும் கூறுவர்.

உண்மை என்பது வன்மையானது. பொய் கூறாமை என்பது தவம் போன்றது.

கவனமாக இருங்கள்.

பேச இயலாமையால் பொய்யும் மெய்யாகிவிடக்கூடும்.

ஓர் உண்மை தெரியுமா?

வாய்மைக்கே வாழ்க்கைப்பட்ட மகாத்மா காந்தி இறந்த ஆண்டில் யாருக்குமே நொபல் அமைதி விருது வழங்கப்படவில்லை. அமைதிக்கென உழைத்தவர் எவரும் அந்த ஆண்டு உயிருடன் இல்லை என காந்தியை இவ்விதமாய் கௌரவித்தது அந்த நொபல் நிறுவனம்.

வாய்மையால் இழப்பது அதிகம் தான். ஆனால், உலகத்தை புரிந்து கொள்ளவேண்டுமா?

மனம் திறங்கள். மௌனம் உடையுங்கள்.

உண்மைக்கு உருக்கொடுத்து, அன்பாய், அடக்கமாய், இனிமையாய், இணக்கமாய் பேசுங்கள்.

பாரதியும் சொன்னான்: உள்ளத்தில் உண்மையது உண்டாகில் வாக்கினிலே ஒளியுண்டாகும்.








All the contents on this site are copyrighted ©.