2010-07-15 14:31:10

குருக்களின் பாலியல் முறைகேடுகள் குறித்த புதிய விதிகளை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின் விசுவாசக்கோட்பாடுகளுக்கானப் பேராயம்.


ஜூலை 15, 2010 திருமறைச் சட்டங்களின் துணையுடன் திருச்சபைக்குள் தீவிரக் குற்றங்கள் விசாரிக்கப்படுவது குறித்து திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்திற்கு பொறுப்பை வழங்கும் 2001ம் ஆண்டின் Motu Proprio ஏட்டில் சில முக்கிய விதிகளைப் புகுத்தியுள்ளது அப்பேராயம்.
கடந்த 9 ஆண்டுகளில் கொணரப்பட்ட சில திருத்தங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக புது விதிகளாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன எனக்கூறும் இப்பேராயம், குருக்களின் தவறான பாலியல் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்த வழக்குகள் தொடர்புடைய விதிகளில் முக்கிய மாற்றங்கள் கொணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
தீவிர பாலியல் குற்றமிழைத்த குருவானவரை குருத்துவப் பணியிலிருந்து நீக்கும் நோக்குடன் நேரடியாகிய அவ்வழக்கை, தலத்திருச்சபைச் சட்ட நடைமுறைகளையும் தாண்டி, திருத்தந்தையின் முன்னிலையில் சமர்ப்பிப்பது குறித்த புதிய விதி தற்போது புகுத்தப்பட்டுள்ளது.
திருச்சபை நீதிமன்றத்தில் குருக்கள் மட்டுமே அதிகாரிகளாகச் செயல்பட்டு வந்த நிலையை மாற்றி இவ்வழக்குகள் பொறுத்தவரையில் அவர்களுடன் பொதுநிலையினரும் இணைந்து பணியாற்றும் வண்ணம் புதிய விதி ஒன்றும் புகுத்தப்பட்டுள்ளது.
ஒரு வழக்கு தொடரப்படுவதற்கான கால அவகாசம் பத்து ஆண்டுகளுக்குள் என இருந்தது தற்போது 20 ஆண்டுகளாகவும், அதற்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாகவும் விதி மாற்றப்பட்டுள்ளது.
14 வயதிற்குட்பட்ட சிறார்கள் தொடர்புடைய பாலியல் இழிவிலக்கியங்களையோ, பாலியல் புகைப்படங்களையோ குருகுலத்தினர் வைத்திருப்பது குற்றமென்ற புதிய விதியை புகுத்தியுள்ள சட்ட ஏடு, மூளை வளர்ச்சி குன்றியவர்களோ, 14 வயதிற்குட்பட்ட சிறாரோ பாலியல் வகையில் தவறாக நடத்தப்படுவது ஒரே அளவான பெருங்குற்றம் எனவும் தெரிவிக்கிறது.பாலியல் தவறு செய்யும் குருக்கள் மீது அந்தந்த நாடுகளின் பொதுநிலை நீதி மன்றங்களில் நடக்கும் வழக்குகளில் தலத்திருச்சபை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் இவ்வேடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.