2010-07-14 16:52:09

மாற்றுத் திறனுடையோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வியட்நாமிலிருந்து இத்தாலி வரை சைக்கிள் பயணம்


ஜூலை 14, 2010. மாற்றுத் திறனுடையோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வியட்நாமிலிருந்து இத்தாலி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ஒரு இத்தாலியர் இச்செவ்வாயன்று பங்களாதேசை அடைந்தார்.

41 வயதான Matteo Tricarico ஒரு மாணவராக இருந்த போது, செஞ்சிலுவைச் சங்கத்தில் பணி புரிந்தவர். வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் அவர் பணி புரிந்தபோது, அங்கு மாற்றுத் திறனுடையோர் பலர் துன்புற்றதைக் கண்டதால் அவர்களுக்குத் தனிப்பட்ட வகையில் பணி புரிய தன்னைக் கடவுள் அழைத்ததை உணர்ந்ததாகக் கூறினார்.

வளரும் நாடுகளில் மாற்றுத் திறனுடையோருக்காக உழைக்க அதிகம் பேர் முன் வராததால், இங்குள்ள இளையோரிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக Matteo கூறினார்.

Matteoவின் இந்த முயற்சி, மாற்றுத் திறனுடையோருக்காக உழைக்க, பங்களாதேஷில் வாழும் பல கத்தோலிக்க இளையோரைத் தூண்டியுள்ளதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

Matteo Tricarico அடுத்ததாக, இந்தியாவிலும், நேபாளத்திலும் தன் சைக்கிள் பயணத்தைத் தொடர்வார் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.