2010-07-14 16:32:12

ஜூலை 15 – நாளும் ஒரு நல்லெண்ணம்


உணர்வுகளை வார்த்தையாய், பெருமூச்சாய், கண்ணசைவாய் வெளிப்படுத்தலாம். செவி வழி உணர்த்துதல் இயலாது. வெளிப்படுத்தியதை ஏற்கவே முடியும். வார்த்தைகளை உள்வாங்கும் சக்தி அதற்குத்தான் உண்டு.

இமை கொண்டு கண்ணை மூடலாம். இதழ் கொண்டு வாய் மூடலாம். மடல் கொண்டு செவி மூடல் இயலுமோ? திறந்தே வைத்திரு என ஆண்டவனே இட்ட கட்டளை அது.

ஏன் என்ற கேள்வியில் தான் ஞானம் பிறந்தது என்பார். செவி திறக்க மறுத்தால் கேள்வியின் அர்த்தம் எவ்விதம் புரிவாய்?

செவி கொடுங்கள்! செவி மடுங்கள்!

காது கொடுத்துக் கேட்டே பிரச்னைகளுக்கு விடியல் தேடலாம்.

நண்பரின் பிரச்னைகளைக் காதுக்குள் வாங்குங்கள். அவர் பேசட்டும். உங்கள் அடிமனதின் வாயிலாய் காது மட்டும் திறந்திருக்கட்டும்.

ஒருவரின் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்ந்து கொண்ட நிம்மதி, பலனாக அமையும் இருவருக்கும்.

நீங்கள் எதிர்பார்த்தது அங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்து வந்த ஆறுதலாவது அங்கு கிட்டட்டும். ஆம். கேட்க செவி இருந்தால், சுமக்கத் தோள் கொடுக்க மனம் இருக்கும்.

வாய் ஒன்று செவி இரண்டென இந்த பாகுபாடு ஏன் என்று இறையைக் கேட்டேன். ஒரு முறை பேசு, இருமுறை செவிமடு என்றான்.

மௌனத்தின் குரல் கூட நம் செவிப்பறைகளைத் தாக்கியதுண்டு. ஒலியை விட வலுவான மௌனமும் உண்டு. அதை செவிமடுக்க காதுகளும் நம்மிடம் உள்ளன. இன்னும் ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?

நான் ஒன்றை பேச நீங்களோ வேறொன்றைப் பேசிக்கொண்டிருக்கிறீர்களே!

நான் பேசுவது காதில் விழவில்லையா?








All the contents on this site are copyrighted ©.