2010-07-12 15:49:10

இம்மாத இறுதிக்குள் டச்சு குரு Jim Borst நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது இந்திய அரசு


ஜூலை 12, 2010 இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 47 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் மறை போதகக்குருவான Jim Borst நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளது இந்திய அரசு.

1963ம் ஆண்டு முதல் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வரும், டச்சு நாட்டைச் சேர்ந்த Mill Hill மறைபோதகச் சபையின் குரு Borstன் கல்வி நிறுவனமான நல்லாயன் பள்ளி 2003ம் ஆண்டில் இருமுறை தொடர்ந்துத் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பகுதியில் கத்தோலிக்கப் பள்ளிகளின் வளர்ச்சியால் தங்கள் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும் இஸ்லாமியர்கள், குரு Borst மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அவரை அரசு நாட்டை விட்டு வெளியேற்ற வழி வகுத்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, குருவின் வெளியேற்ற உத்தரவை திரும்பப்பெறவேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துவதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாக ஜம்மு ஸ்ரீநகர் ஆயர் Peter Celestine Elampassery தெரிவித்துள்ளார்.

Mill Hill மறைபோதகச் சபை ஜம்மு காஷ்மீர் பகுதியில் கல்வி மற்றும் நல ஆதரவுப் பணிகளில் 1891ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றது.

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும், இந்நாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவும் கிறிஸ்துவப்பள்ளிகளில் பயின்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.