2010-07-10 16:00:09

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
பட்டப் பகலில் விளக்கைப் பிடித்துக் கொண்டு மனிதர்களைத் தேடிய டயோஜீனஸ் போன்ற அறிஞர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி ஒரு செயலில் ஈடுபட்டிருப்பதைப் போல் இன்று உணர்கிறேன். நானும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு, நடுப் பகலில் சூரியனைத் தேடுவதைப் போன்ற ஓர் உணர்வு எனக்கு. ஏன் இந்த உணர்வு?
இன்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ள புகழ்பெற்ற ஓர் உவமை இப்படி ஓர் உணர்வை என்னில் எழுப்பியுள்ளது. ‘நல்ல சமாரியர்’ என்ற இந்த உவமையைப் பற்றி பேசுவது கையில் விளக்கை எடுத்துக் கொண்டு சூரியனைத் தேடுவது போல் இருக்காதா? கட்டாயம் இருக்கும். இயேசுவின் எல்லா உவமைகளுக்கும் விளக்கம் தர முயலும் போது, இந்த உணர்வுதானே எழும்!
ஆனால், மற்றொரு கண்ணோட்டத்தோடு இதைப் பார்க்க விழைகிறேன். இயேசுவின் உவமைகள், அவரது கூற்றுகள்... ஏன்? விவிலியம் முழவதுமே ஒரு கடல். அந்தக் கடலில் ஒவ்வொரு முறை மூழ்கும்போதும், ஏதாவது ஒரு முத்தை கையில் ஏந்தி கரை சேர முடியுமே. இந்தக் கண்ணோட்டத்தோடு, உணர்வோடு நல்ல சமாரியர் என்ற இந்த உவமைக்குள் மூழ்குவோம். இன்றைய ஞாயிறு சிந்தனையில் இந்த உவமையைப் பற்றி பேசாமல், இந்த உவமையைச் சார்ந்த மூன்று அம்சங்களைப் பற்றி மட்டும் பேசுவோம்.
முதலில்... இந்த உவமைக்குத் தரப்பட்டுள்ள "நல்ல சமாரியர்" என்ற பெயர். இரண்டாவது... இந்த உவமையை இயேசு சொல்வதற்குத் தூண்டுதலாய் இருந்த கேள்வி. மூன்றாவது... இந்த உவமையின் இறுதியில் இயேசு தரும் ஆலோசனை.

தலைப்பு:
'நல்ல சமாரியர்' என்ற இந்தத் தலைப்பு எங்கிருந்து வந்தது? இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுவதாக, லூக்கா 10: 33ல் நாம் வாசிப்பது இதுதான்: "அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது..."
சமாரியர் என்ற வார்த்தைதான் நற்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நல்ல சமாரியர் என்ற வார்த்தைகள் கிறிஸ்துவ பாரம்பரியத்தில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள். இதேபோல், கல்வாரியில் இயேசுவுடன் அறையப்பட்டிருந்த இரு குற்றவாளிகளில் ஒருவரை நாம் 'நல்ல கள்வர்' என்று தலை முறை, தலை முறையாய் அழைத்து வருகிறோம். இதுவும் நற்செய்தியில் சொல்லப்படாத ஓர் அடைமொழி. கள்வர்களில் நல்லவர், கெட்டவரா? கேட்கச் சிரிப்பாய் இருக்கிறது.
யூதர்களிடம் யாராவது நல்ல சமாரியர் என்று சொன்னால், அவர்களும் இப்படி சிரித்திருப்பார்கள். சமாரியர்களில் நல்லவர்களா? இருக்க முடியாது என்பது அவர்களது தீர்மானம். இப்படி யூதர்கள் தாங்களாகவே தீர்மானம் செய்துகொண்ட, தாங்களாகவே இலக்கணம் வகுத்துக் கொண்ட பலர் உள்ளனர். வரி வசூலிப்பவர், ஆயக்காரர், தொழுநோயாளிகள், என்று பலருக்கும் யூதர்கள் வகுத்திருந்த இலக்கணம்... அவர்கள் நல்லவர்கள் இல்லை, கடவுளின் சாபம் பெற்றவர்கள். இந்த இலக்கணத்தை மாற்றி, இயேசு அவர்களில் பலரை நல்லவர்களாக்கி அரியணை ஏற்றியுள்ள நிகழ்ச்சிகளை நற்செய்தியில் வாசிக்கிறோம். இதுதான் இயேசுவின் அழகு.
நல்ல சமாரியர் என்ற இந்த இரு சொற்கள் லூக்காவின் இந்த உவமையைத் தாண்டி, நமது மனித குலத்தில் அன்று முதல் இன்று வரை பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு மனிதர் பிறருக்கு உதவி செய்கிறாரோ, அவருக்கு மதம், குலம், சமூக நிலை என்று எல்லாவற்றையும் கடந்து தரப்படுவது "அவர் ஒரு நல்ல சமாரியர்" என்ற அற்புதமான பட்டம். அந்த அளவுக்கு இவ்விரு சொற்களும் மனித குலத்தின் ஆழ் மனதில் இடம் பிடித்துள்ளன.

நல்ல சமாரியர், Good Samaritan என்ற வார்த்தைகள் இவ்வளவு புகழ் பெற்றவையா? இவ்விரு வார்த்தைகளையும் Google வழியாக இணைய தளத்தில் தேடிப்பாருங்கள், இந்த இரு வார்த்தைகளின் பெருமையை ஓரளவாகிலும் உணர்ந்து கொள்வீர்கள். Good Samaritan Hospital என்ற சொற்றொடருக்கு மட்டும் ஒரு நொடியில் Googleல் 12 லட்சத்து 60 ஆயிரம் தகவல்கள் கிடைத்தன. இன்னும் Good Samaritan Institute, Good Samaritan Award என்று ஒவ்வொன்றாகத் தேடினால், ஒரு நாள் முழுவதும் இந்தத் தேடலில் நாம் மூழ்கி, மூச்சடைத்துப் போவோம்.

கேள்வி:
இரண்டாவது, இயேசு இந்த உவமையைச் சொல்லத் தூண்டுதலாய் இருந்த அந்தக் கேள்வியைப் பற்றி சிந்திக்கலாம். இயேசுவைத் தங்கள் அறிவுத்திறனால், கேள்விகளால் மடக்கி விட நினைத்த பரிசேயர், மறை நூல் அறிஞர், சட்ட அறிஞர்.. இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்களது கேள்விகளுக்கு இயேசு சொன்ன பதில்கள், அற்புதமான, காலத்தால் அழியாத கதைகளாய் நமக்கெல்லாம் கிடைத்த அரிய பரிசுகள். இப்படி சொல்லப்பட்ட கதைகளில், உவமைகளில் ஒன்று தான் நல்ல சமாரியர் உவமையும்.
இயேசுவை அணுகிய சட்ட அறிஞரின் முதல் கேள்வி மிகவும் ஆழமானது. நிலை வாழ்வை, நிறை வாழ்வை அடைய வழி என்ன என்ற கேள்வி ஒரு மனிதரின் உண்மையானத் தேடலைப் போல் ஒலிக்கிறது. ஆனால், இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள் வித்தியாசமாகச் சொல்கிறது. இந்த உவமை கூறப்பட்ட பின்னணி இதோ:

லூக்கா 10: 25-30 
விடைகளைத் தெரிந்து கொண்டு கேள்விகள் கேட்பவர்களைப் பார்த்திருக்கிறோம். நம்முடைய நேரத்தையும் அவர்களது நேரத்தையும் வீணாக்கும் இவர்களைப் பார்த்து நான் எரிச்சல் அடைந்திருக்கிறேன். பல நேரம் பரிதாபப்பட்டிருக்கிறேன். நிலை வாழ்வைக் குறித்து, சட்ட அறிஞர் கேட்ட கேள்விக்கு அவரிடமே விடையை வரவழைக்கிறார் இயேசு.
அறிவுப் பூர்வமாய் சட்ட அறிஞர் சொன்ன அந்த பதிலோடு அவர் விடை பெற்றிருக்கலாம். அவரது அறிவுத் திறனைக் கண்டு மக்களும் வியந்திருப்பார்கள். ஆனால், அவர் விடுவதாயில்லை. அடுத்ததாய்க் கேட்டாரே ஒரு கேள்வி! எப்படிப்பட்ட கேள்வி அது!
"எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று அவர் கேட்டதும், சூழ இருந்த மக்கள், சீடர்கள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஒருவேளை இயேசுவே இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்படி அவர் கேள்வி கேட்டதை குழந்தைத் தனம் என்று ஒதுக்குவதா? இல்லை, குதர்க்கமாய்க் கேட்கிறார் என்று குற்றம் சாட்டுவதா?
இயேசு இந்தக் கேள்விக்கு விரிவாகப் பதில் சொல்கிறார்.

மேலோட்டமாகப் பார்த்தால், நிலை வாழ்வைப் பற்றி சட்ட அறிஞர் கேட்ட முதல் கேள்வி மிக முக்கியமான கேள்வி. அதற்கு இயேசு பெரிய விளக்கம் சொல்லியிருக்க வேண்டும். என் அயலவர், அடுத்திருப்பவர் யார் என்ற இந்தக் குதர்க்கமான கேள்விக்கு ஒரு இலேசான புன்னகையை உதிர்த்து விட்டு, இயேசு புறப்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதை விட, முக்கியமான பணிகள் இயேசுவுக்குக் காத்துக் கொண்டிருந்தன.
ஆனால், இயேசு இந்தக் கேள்விக்கு விரிவான பதில் சொல்கிறார். சட்ட அறிஞர் கேட்ட அந்தக் கேள்வியால் அதிர்ச்சியடைந்திருந்த யூதர்களுக்கு, இயேசுவின் இந்த பதில் இன்னும் அதிக அதிர்ச்சியைத் தந்திருக்கும். அயலவர், அடுத்திருப்பவர் தங்கள் குலத்தைச் சேர்ந்த இஸ்ராயலர் என்பது எல்லாருக்கும் தெரிந்த தெளிவான பதில். ஆனால், இயேசு சொன்ன பதில், சட்ட அறிஞர் கேட்ட கேள்வியை விட அதிக குதர்க்கமாய் ஒலித்திருக்க வேண்டும் யூதர்களுக்கு.

என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடி வருகிறோம். ஜூலை 11 உலக மக்கள் தொகை நாள் என்று நாம் சிறப்பிக்கிறோம். இன்றைய கணக்குப்படி உலகில் 680 கோடிக்கும் அதிகமாய் மக்கள் இருப்பது உண்மை. இத்தனை பேர் இருந்தும், நமது அயலவரை, அடுத்தவரை இன்னும் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம்.
"இந்த உலகத்தைத் தாண்டி, விண்வெளியைக் கடந்து வெண்ணிலவில் காலடி வைத்து விட்டுத் திரும்பி விட்டோம். ஆனால், நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் காலடி வைக்கத் தயங்குகிறோம்." என்று நாம் வாழும் இந்தப் புதிரான காலத்தைப் பற்றி George Carlin என்பவர் கூறியுள்ளார்.
"என் அயலவர், அடுத்தவர் யார்?" என்று சட்ட அறிஞர் கேட்டது குதர்க்கமான கேள்வியாக இருக்கலாம். ஆனால், இதே கேள்வியைத் தானே இன்றும் நம்மில் பலர் கேட்டு வருகிறோம். எப்போது இதற்கு விடை கண்டு பிடிப்போம்?

விடை:
அயலவர் யார் என்ற கேள்விக்குப் பதில் தேட உண்மையிலேயே ஆவலாய் இருக்கிறோமா? பதில் தேடி கிடைத்து விட்டால், அது நம்மைப் பிரச்சனைகளில் சிக்க வைத்து விடும்.
அடுத்தவர் யார் என்று கேள்வி கேட்ட சட்ட அறிஞர் தன் அறிவுத் திறனை மக்கள் முன் பறை சாற்ற கேள்விகள் கேட்டார். பதிலுக்கு இயேசுவும் தனக்கு கதை சொல்லும் திறமை உண்டு என்பதை மக்கள் முன் பறை சாற்ற இந்த உவமையைச் சொல்லவில்லை. இயேசு தந்த பதில் வெறும் தத்துவ உண்மை அல்ல. நம் அறிவுப் பசிக்குத் தீனி போடும் வார்த்தை விளையாட்டல்ல. அடுத்தவர் யார் என்பதை இயேசு தெளிவுபடுத்தியதும், செயல்படச் சொன்னார்.
இதைத்தான் பிரச்சனை என்று நான் சொன்னேன். அடுத்தவர் யார் என்று நாம் கண்டுபிடித்து விட்டால், உடனே செயலில் இறங்க வேண்டும். இந்தச் செயல்கள் பல நேரங்களில் நம்மைப் பிரச்சனைகளில் சிக்க வைக்கும். இயேசு இந்த உவமையின் இறுதியில் சொன்ன வரிகள் நமது தோளை உலுக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து... தேவைப்பட்டால், முகத்தில் அறைந்து நம்மைத் தூக்கத்திலிருந்து, மயக்கத்திலிருந்து எழுப்பும் வரிகள்.

லூக்கா 10: 36-37 
அடுத்தவர் யார் என்ற கேள்விக்குப் பதில் செயல் வடிவில் இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?

 "நீரும் போய் அப்படியே செய்யும்." நாமும் போய் அப்படியே செய்வோம்.







All the contents on this site are copyrighted ©.