2010-07-10 16:11:18

கடந்த ஆண்டில் 41இலட்சம் யூரோ நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது திருப்பீடம்.


ஜூலை 10, 2010. கடந்த ஆண்டின் திருப்பீட நிதிநிலை குறித்து ஆராய்ந்த கர்தினால்களின் கூட்டம் அவ்வாண்டில் 41இலட்சம் யூரோ நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் திருப்பீடத்தின் வருமானம் 25 கோடியே ஓர் இலட்சத்து 82ஆயிரத்து 364 யூரோக்களாக இருக்க, செலவோ 25 கோடியே 42 இலட்சத்து 84ஆயிரத்து 520 யூரோக்களாக இருந்தது எனக்கூறும் கர்தினால்களின் கூட்டம், வருமானமற்ற பெரும்பான்மையான செலவுக்கானக் காரணம் வத்திக்கான் வானொலி என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

திருப்பீடத்தில் தற்போது 2672 பேர் பணியாற்றுகின்றனர், இதில் 766பேர் மறை மாவட்ட குருகுலத்தினர், 261 பேர் ஆண் துறவு சபைகளையும், 83 பேர் பெண் துறவு சபைகளையும் சேர்ந்தவர்கள். ஏனைய 1652 பேரும் பொதுநிலையினர் அதில் 451 பேர் பெண்கள்.

இது தவிர 4587 முன்னாள் பணியாளர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

புனித ராயப்பர் காசு என திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கென தலத்திருச்சபைகள் மற்றும் தனியார்கள் வழங்கும் தொகை 2009ம் ஆண்டு 8கோடியே 25 இலட்சத்து 29 ஆயிரத்து 417யூரோக்கள் என சிறிது அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வழங்குவதில் அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி, ஃபிரான்ஸ் ஆகியவை முன்னணியில் நிற்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.