2010-07-08 15:36:30

கத்தோலிக்கத் திருச்சபையும், க்யூபா அரசும் மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தை முயற்சிகளின் உச்சகட்டமாக 52 அரசியல் கைதிகள் விடுதலை


ஜூலை 08, 2010 கடந்த இரு மாதங்களாக கத்தோலிக்கத் திருச்சபையும், க்யூபா அரசு அதிகாரிகளும் மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தை முயற்சிகளின் உச்சகட்டமாக, 52 அரசியல் கைதிகளை விடுவிப்பதாக க்யூபா அரசு இப்புதனன்று அறிக்கை வெளியிட்டது.
இக்கைதிகளில் ஐவர் உடனடியாக விடுவிக்கப்படுவர் என்றும், மீதி 47 பேர் அடுத்த நான்கு மாதங்களில் விடுவிக்கப்படுவர் என்றும் க்யூபா அரசுத் தலைவர் Raul Castro, Havana பேராயர் கர்தினால் Jaime Ortegaவுக்குத் தெரிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன.
2003ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 75 பேரில் இந்த 52 பேரும் அடங்குவர் என்றும், கர்தினால் Ortegaவின் தொடர்ந்த முயற்சிகளால், இவர்களில் ஒருவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டார் என்றும், வேறு பன்னிருவரின் சிறைச் சாலைகள் அவர்கள் குடும்பம் வாழும் பகுதிகளுக்கு மாற்றப்பட்டிருந்ததெனவும் செய்திகள் கூறுகின்றன.வத்திகானின் வெளியுறவு செயலரான பேராயர் Dominique Mambertiயை ஜூன் மாதத்தில் க்யூபா அரசுத் தலைவர் சந்தித்தார் என்றும், அச்சமயம் வத்திக்கானுக்கும், க்யூபா அரசுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவர் விழைவதாகக் கூறினார் என்றும் வேறொரு செய்திக் குறிப்பு கூறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.